பிரகாஷ் ராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. வெளியான தகவல்
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் அதில் தனது முத்திரையை அவர் பதித்துவிடுவார்.

கே.பாலசந்தரின் சிஷ்யர்
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜ் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தை தொடங்கினார். கே.பாலசந்தர் ஒரு விழாவிற்கு சென்றிருந்தபோது பிரகாஷ் ராஜின் நடிப்பைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதனையடுத்து தமிழ் சினிமாவில் தான் இயக்கிய டூயட் படத்தில் பிரகாஷ் ராஜை அறிமுகப்படுத்தினார் கே.பாலசந்தர்.

அடுத்தடுத்து குவிந்த வாய்ப்புகள்
முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் திறமையை நிரூபித்த பிரகாஷ் ராஜுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. குறிப்பாக வசந்த் இயக்கிய ஆசை படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் அப்பு படத்தில் திருநங்கையாக நடித்து நடிப்பில் அசுர பாய்ச்சல் செய்திருப்பார். அதனையடுத்து பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பல மொழிகளில் தடம் பதித்தார்.

பிரகாஷ் ராஜ் எனும் செல்லம்
கில்லி படம் விஜய்யின் கேரியரில் முக்கியமான படம். அப்படத்தில் விஜய் செய்த ஆக்ஷன்களைவிட ஒரு படி அதிகம் பேசப்பட்டது பிரகாஷ் ராஜின் டயலாக் டெலிவிரியும், அவரது நடிப்பும்தான். குறிப்பாக த்ரிஷாவை அவர் செல்லம் என்று அழைத்தது இன்றுவரை ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் பிரகாஷ் ராஜ் மிக இயல்பாக ஸ்கோர் செய்திருப்பார். செல்லம் என்ற வார்த்தை பிரகாஷ் ராஜால் பிராண்டானது. இதனால் பெரும்பாலான மேடைகளில் செல்லங்களா என்றுதான் பிரகாஷ் தனது பேச்சை ஆரம்பிப்பார்.

அரசியலில் பிரகாஷ் ராஜ்
ஆரம்பத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திவந்த அவர், தனது தோழியும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அரசியல் சார்ந்த கருத்தையும், பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவாவுக்கு எதிரான கருத்தையும் ஆத்திரமாக வைத்துவருகிறார். அதுமட்டுமின்றி சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடவும் செய்தார்.

சமீபத்தில் நடித்த படங்கள்
பிரகாஷ் ராஜ் சமீபத்தில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருக்கிறார். அப்படத்தில் அவர் சுந்தர சோழர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். முதல் பாகத்தில் குறைவான நேரத்திலேயே வந்தாலும் இரண்டாவது பாகத்தில் அதிக சீன்களில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்து மதிப்பும், சம்பளமும் எவ்வளவு தெரியுமா?
பிரகாஷ் ராஜ் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்தச் சுழலில் அவரது சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, இந்திய ரூபாய் மதிப்பில் பிரகாஷ் ராஜுக்கு 40 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து இருப்பதாகவும், அவர் ஒரு படத்துக்கு 2.5 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











