Womens Day Special - பெண்கள் மிகப்பெரிய சக்திகள்.. கவனம் ஈர்த்த 5 படங்கள்
சென்னை: நாளை பெண்கள் தினம் கொண்டாடப்படவிருக்கும் சூழலில் தமிழில் பெண்களை மையப்படுத்தி சமீபத்தில் வந்து கவனம் ஈர்த்த ஐந்து படங்கள் குறித்து காணலாம்.
'பெண்கள் மிகப்பெரிய சக்தி அதை வீணடிக்க வேண்டாமேனு பார்க்குறேன்'. பேராண்மை படத்தில் வரும் வசனம் இது. எஸ்.பி.ஜனநாதன் எழுதிய இந்த வசனம் போல்தான் பெண்கள் மிகப்பெரிய சக்தி. தமிழ் சினிமாவை பொறுத்தவரை கே.பாலசந்தர் போன்றோர் பெண்களை மையப்படுத்தி பல படங்களை எடுத்த ஆரோக்கியமான சூழல் ஒருகாலத்தில் நிலவியது. ஆனால் காலப்போக்கில் அது மறைய ஆரம்பித்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக பெண்களை மையப்படுத்தி படங்கள் வரும் ஆரோக்கியமான சூழல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.

பெண்களை மையப்படுத்திய படத்துக்கு ஆழமான விதை போட்ட அறம்
கோபி நயினார் இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம்தான் அறம். நயன்தாரா அதுவரை ஏற்றிடாத கதாபாத்திரத்தை அறம் படத்தில் ஏற்றார். ஆழ்குழாய் கிணறுக்குள் விழுந்த சிறுமியை ஒரு பெண் கலெக்டர் அதிகாரவர்க்கத்தின் பல தடைகளை மீறி காப்பாற்றும் விதமாக படம் உருவாகியிருந்தது. படத்தை பார்த்த அனைவரும் நயன்தாராவை தங்களது வீடுகளில் ஒருவராகவே ஏற்றுக்க்கொள்ள ஆரம்பித்தனர்.அந்த அளவுக்கு அந்த கேரக்டரை மிகவும் பவர்ஃபுல்லாக உருவாக்கியிருப்பார் கோபி நயினார். அந்தப் படம் வந்ததிலிருந்துதான் பல நடிகைகள் பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிக்கலாமா என்ற தயக்கத்தை உடைத்து வெளியே வந்தனர். அந்தவகையில் அறம் படத்தை ஒரு ஆழமான விதை என்றே சொல்லலாம்.

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள்
தமிழில் முன்னணி ஹீரோயினாக இருந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு அவர் 36 வயதினிலே படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படமும் பெண்ணை மையப்படுத்தி உருவாகியிருந்தது. தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த ஜோதிகா கடந்த 2020ஆம் ஆண்டு பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்திருந்தார். ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கியிருந்த இந்தப் படமும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. பெண் வழக்கறிஞராக நடித்திருந்த ஜோதிகா ஆணாதிக்க சமுதாயத்தை எதிர்த்து பேசும் வசனங்கும், படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

சாய் பல்லவியின் கார்கி
பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி நடித்த படம்தான் கார்கி. ஹரிஹரன் ராஜுவும், கௌதம் ராமச்சந்திரனும் இணைந்து கதை எழுதி கௌதம் ராமச்சந்திரன் இயக்கிய் படம். குழந்தைக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்தும், அதனால் அந்த குழந்தை மன ரீதியாக எவ்வளவு பிரச்னைகளை சந்திக்கிறார் என்பதை அப்பட்டமாக பேசிய திரைப்படம். வளர்ந்துவரும் நடிகையான சாய் பல்லவி கார்கி படத்தில் நடித்ததற்காக அவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அந்த குழந்தையை தனது தந்தையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாக வரும் காட்சியில் ஒரு பெண்ணாக யாருக்கும் அச்சப்படாமல், பாசம், குடும்பம் என்று ஸ்டீரியோ டைப்புக்குள் அடங்காமல் தண்டனை பெற்று தரும் கார்கி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.

டாக்சி உமன் டிரைவர் ஜமுனா
பெண்கள் பல துறைகளில் தங்களது தடத்தை பதித்து நிரூபித்துவிட்டாலும் சில தொழில்களை அவர்கள் செய்யக்கூடாது என இன்னமும் சில பிற்போக்குவாதிகள் கூறிக்கொண்டிருக்கின்றனர். அப்படி அவர்கள் கூறும் தொழில்களில் ஒன்று ஓட்டுநர் தொழில். ஓட்டுநர் என்றாலே ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை உடைத்து ஒரு பெண்ணும் டிரைவராக இருக்கலாம் என்பதை ஆணித்தரமாக கூறிய படம்தான் டிரைவ்ர ஜமுனா. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்த இந்தப் படத்தை கின்ஸ்லின் இயக்கியிருந்தார். பழி வாங்குதல் என்றாலே அதை ஆண்தான் செய்ய வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை உடைத்த படம் டிரைவர் ஜமுனா. தனது தந்தையை கொன்றவர்களை தெளிவாக திட்டமிட்டு கொல்லும் ஜமுனா நிச்சயம் ஒரு புத்திசாலி பெண்தான். மேலும், பெண்கள் எந்தத் தொழிலை வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் எதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்தப் படம் ரசிகர்களுக்கு உணர்த்தியது.

சென்சேஷ்னல் ஆன அயலி
சமீபத்தில் வெளியாகி சென்சேஷ்னல் ஹிட்டடித்த வெப் சீரிஸ் அயலி. முத்துக்குமார் இயக்கிய இந்த வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்கள் கல்வி கற்கவே கூடாது என்று மிகவும் பிற்போக்கான ஊரிலிருந்து ஒரு சிறுமி படிப்பதற்கு ஆசைப்பட்ட கதையை கூறிய வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸில் பல டெம்ப்ளேட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கல்விக்காக தான் வயதுக்கு வந்ததை மறைத்த சிறுமி, உள்ளே நுழையக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட கோயிலுக்குள் ஒட்டுமொத்த பெண்களும் போய் அமர்வது, அங்கே இருந்தபடி உங்களது கௌரவத்தை எதற்கு எங்க காலுக்கு நடுவுல தேடுறீங்க என பேசும் வசனம் என அயலி ஒவ்வொரு காட்சியிலும் அதகளம் செய்திருப்பாள். பெண்களுக்கு கல்விதான் முக்கியம். கல்விக்காக அதுவும் பெண் கல்விக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம், யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்ற மிகப்பெரிய கருத்தை ரொம்பவும் ஆழமாகவே பதிவு செய்திருப்பார் முத்துக்குமார்.
இப்படி பல படங்களும், வெப் சீரிஸ்களும் பெண்களை மையப்படுத்தி வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த நிலை இன்னும் விரிவடைந்து பெண்களை மையப்படுத்திய சினிமாக்களும், வெப் சீரிஸ்களும் தொடர்ந்து வந்தால் நிச்சயம் தமிழ் திரைப்பட துறை பல படிகள் முன்னேறும் என்பது உண்மை. ஏனெனில் பெண்கள் மிகப்பெரிய சக்திகள். அந்த சக்திகளுக்கு பெண்கள் தின வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











