ஆஷா போஸ்லே தமிழில் பாடிய ஹிட் பாடல்கள் தெரியுமா?.. ஒவ்வொன்றும் க்ளாஸிக்.. எப்போதும் அழிவில்லை
மும்பை: இந்திய அளவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஆஷா போஸ்லே. அவருக்கு மொழிகள் கடந்து ரசிகர்கள் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க 92 வயதாகும் அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திரையுலகினரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள்.
மகாராஷ்டிராவில் கடந்த 1933ஆம் ஆண்டு பிறந்தவர் ஆஷா போஸ்லே. அவரது குடும்பமே பாரம்பரியமான இசை குடும்பம் என்பதால் இவருக்கும், இவரது சகோதரி லதா மங்கேஷ்கருக்கும் சிறு வயதிலிருந்தே இசையின் மீது ஆர்வம் பிறந்தது. அதனையடுத்து இரண்டு பேரும் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்டார்கள். சூழல் இப்படி இருக்க லதாவுக்கு 1942ஆம் ஆண்டும், ஆஷா போஸ்லேவுக்கு 1943ஆம் ஆண்டும் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

கொடிகட்டி பறந்த ஆஷா: லதா மங்கேஷ்கரும், ஆஷா போஸ்லேவும் இந்திய திரையிசையில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தார்கள். இரண்டு பேரின் குரல்களிலும் சங்கீதம் மட்டுமின்றி மழலை தனம், கொஞ்சம் பாணி என அத்தனையும் வாய்க்கப்பெற்றது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு என இந்தியாவில் இருக்கும் பல மொழிகளிலும் ஆஷா போஸ்லே பாடியிருக்கிறார்.
உயிரிழந்த ஆஷா போஸ்லே: நிலைமை இவ்வாறு இருக்க வயோதிகம் காரணமாக திரைத்துறையிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தார் ஆஷா. அவருக்கு திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தெற்கும் மும்பையில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவருக்கு வயது 92. நாளை மாலை அவரது இறுதி சடங்கு நடக்கவிருக்கிறது.
தமிழில் பாடிய பாடல்கள்: இந்நிலையில் ஆஷா போஸ்லே தமிழில் பாடிய பாடல்களை இதில் பார்க்கலாம். முதன்முதலாக புதுப்பாட்டு படத்தில் எங்க ஊர் காதல் என்ற பாடலை இளையராஜாவுடன் சேர்ந்து பாடினார். அதனையடுத்து ராஜாவின் இசையமைப்பில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் செண்பகமே செண்பகமே பாடலை பாடினார். அந்தப் பாடல் பட்டித்தொட்டியெங்கு ஹிட்டடித்தது. அந்தப் பாடல் ஹிட்டடித்ததால் தொடர்ச்சியாக தன்னுடைய பாடல்களில் ஆஷாவை பயன்படுத்த தொடங்கினார் ராஜா.
எல்லாமே ஹிட்டுகள்தான்: அப்படி இளையராஜாவுக்கு பாடிய, 'ஓ பட்டர் ஃப்ளை (மீரா), சாத்து நட சாத்து (சேதுபதி ஐபிஎஸ்), நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (ஹேராம்), ஆகிய பாடல்களை பாடினார். அந்தப் பாடல்கள் அனைத்துமே மெகா ஹிட்தான். குறிப்பாக தலைமுறைகள் கடந்து இன்றும் அந்தப் பாடல் ரசிக்கப்படுவதற்கு ஆஷா போஸ்லேவின் குரலும் ஒரு காரணம் என்பதை நிச்சயமாக ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். இளையராஜாவுக்கு மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களுக்கும் தமிழில் அவர் பாடல்கள் பாடியிருக்கிறார்.
என்ன பாடல்கள்?: ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் அலைபாயுதே படத்தில் செப்டம்பர் மாதம், தேவா இசையமைப்பில் நேருக்கு நேர் படத்தில் எங்கெங்கே, வித்யாசாகர் இசையமைப்பில் சந்திரமுகி படத்தில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் ஆகிய பாடல்களை அவர் பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களும் காலங்கள் கடந்து இன்றும் பலரது ப்ளே லிஸ்ட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் பாடல்கள் ஒலிக்கும்வரை ஆஷா ஜி ரசிகர்களிடையே வாழ்ந்துகொண்டிருப்பார். ஆஷா போஸ்லேவுக்கு இரங்கல்கள்.


Click it and Unblock the Notifications















