Asha Bhosle: இளம் வயதில் அப்பா மரணம்.. 16 வயதில் முதல் திருமணம்.. ஆஷா போஸ்லே வாழ்க்கை ஒன்னும் அவ்வளவு எளிதல்ல
சென்னை: இந்தியாவின் புகழ் பெற்ற பாடகி, சர்வதேச அளவில் கின்னஸ் சாதனை படைத்த ஆஷா போஸ்லேவின் மரணம் மொத்த இந்திய திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்து வருகிறார்கள். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் 92 வது வயதில் காலமானார் ஆஷா போஸ்லே.
ஆஷா போஸ்லே மறைவுக்குப் பின்னர் பலரும் ஆஷா போஸ்லே மிகவும் பணக்கார பாடகி, அவருக்கு வெளிநாடுகளில் எல்லாம் சொத்துக்கள் இருக்கிறது, உலக அளவில் கின்னஸ் சாதனை படைத்த பாடகி, என்று அவரது புகழ் குறித்து பேசி வருகிறார்கள். ஆனால் ஆஷா போஸ்லேவின் வாழ்க்கை அவ்வளவு எளிதான வாழ்க்கை இல்லை. மிகவும் சவால் நிறைந்த, பெருமளவில் மன தைரியம் தேவைப்படும் வாழ்க்கையைத் தான் அவர் வாழ்ந்துள்ளார்.
ஆஷா போஸ்லே தனது அப்பாவை அவரது 9ஆவது வயதில் இழந்தார். அவரது தந்தை அடிப்படையில் இசைக் கலைஞர், அப்பா மறைவுக்குப் பின்னர், குடும்பத்தை பார்க்க வேண்டிய பொறுப்பு அவரது தலையில் விழவில்லை என்றாலும், தனது இளம் வயதிலேயே அந்த பொறுப்பை தனது அக்கா லதா மங்கேஷ்கருடன் பகிர்ந்து கொண்டார்.

ஆரம்பத்தில் சினிமாக்களில் பாடல்கள் பாடும் போது ஆஷா போஸ்லேவுக்கு முன்னணி நடிகைகளின் டூயட்களுக்கான பாடல்கள் கிடைக்கவில்லை. பாடியது எல்லாம் கிளப் பாடல்கள், கோரஸ் போன்றவைதான். அதற்கு சம்பளமும் குறைவு என்பதால், பெரிய வருமானத்தை ஈட்ட முடியவில்லை என்றாலும், இளம் வயதில் தனக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பயன்படுத்தியதன் விளைவு, மெல்ல மெல்ல நல்ல வாய்ப்புகளைப் பெற்றார்.
16 வயதில் முதல் திருமணம்: வளர்ந்து வரும் காலத்தில் தனது 16வது வயதில் குடும்பத்தினரின் பேச்சையும் மீறி 31 வயதான கன்பத்ராவ் போஸ்லேவை மணந்தார். 11 ஆண்டுகள் திருமண வாழ்க்கை 1960ஆம் ஆண்டில் மணமுறிவில் முடிந்தது. அதன் பின்னர் 1980-ல் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனை இரண்டாவதாக மணந்தார். இவர்கள் திருமண வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் இசை உலகிலும் பெரும் வெற்றிகளைக் குவித்தனர்.
குடும்ப வாழ்க்கை: இந்த தம்பதியருக்கு ஹேமந்த், ஆனந்த் என்ற மகன்களும், வர்ஷா என்ற மகளும் பிறந்தனர். நிம்மதியான குடும்ப வாழ்க்கை, இசை உலகில் அடுத்தடுத்து சாதனைகளைப் படைத்து வந்த ஆஷா போஸ்லே வாழ்க்கை அதன் பின்னர் தான் சோதனை மேல் சோதனையாக மாறியது. இரண்டாவது கணவருடனும் கொஞ்சம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் திருமண உறவை முறித்துக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் கருத்து வேறுபாடு இல்லை.

கணவர் - மகள் மறைவு: 1994இல் ஆர்.டி. பர்மன் மறைந்தபோது ஆஷா நிலைகுலைந்து போனார். "அவரைப் பி*ணமாகப் பார்க்க எனக்குத் துணிவில்லை, அவர் உயிருடன் இருப்பதாகவே நினைக்க விரும்புகிறேன்" என்று கூறி அவர் உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் செல்ல ஆஷா மறுத்துவிட்டார். அதன் பின்னர் மகள் வர்ஷா போஸ்லே மன அழுத்தத்தால் 2012 ஆம் ஆண்டு அவரது இல்லத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இது மொத்தமாகவே ஆஷா போஸ்லேவை உடைத்து விட்டது.
மகன் மரணம்: மகள் இறந்த மூன்று ஆண்டுகளுக்குள் மகன் ஹேம்நாத் புற்றுநோய் சிகிச்சையில் இருந்தவர் மரணம் அடைந்தார். அன்றைய தினம் ஆஷா போஸ்லேவின் அக்காவான லதா மங்கேஷ்கரின் பிறந்த நாள். இப்படி தனது குழந்தைப் பருவத்தில் இருந்து போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்தவர் தான் ஆஷா போஸ்லே. தனது சொந்த வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான நினைவுகள் இருந்தாலும் போராட்ட குணம் வாழ்க்கையில் முன்னேற ரொம்பவும் முக்கியம் என்பதை 92 ஆண்டு கால வாழ்க்கை உணர்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











