Ashish vidyarthi First Wife - அவர் என்னை ஏமாற்றியதில்லை - மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி
சென்னை: Ashish vidyarthi First Wife (ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி) ஆஷிஷ் வித்யார்த்தி எப்போதும் தன்னை கஷ்டப்படுத்தியது இல்லை என அவரது முதல் மனைவி தெரிவித்திருக்கிறார்.
தமிழில் தில், கில்லி, ஆறு, கந்தசாமி, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். அவர் ரஜோஜி பருவா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அது விவாகரத்தில் முடிந்தது. இந்தச் சூழலில் சில நாள்களுக்கு முன்பு அசாமை சேர்ந்த ருபாலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

ஆஷிஷின் விளக்கம்:
இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர். அதேசமயம் 60 வயதில் இந்த இரண்டாவது திருமணம் தேவைதானா என்று சிலர் விமர்சனமும் வைக்க ஆரம்பித்தனர். இதற்கு பதிலளித்த ஆஷிஷ், எனக்கு 57 வயதுதான் ஆகிறது. 60 வயது ஆகவில்லை என பதிலடி கொடுத்திருந்தார். இந்தச் சூழலில் அவரது முதல் மனைவி ரஜோஷி பருவா சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர்,
நாங்கள் மோதிக்கொண்டதில்லை:
நானும் ஆஷிஷும் கடந்த 2021ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றோம். அதை நாங்கள் வெளி உலகிற்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை. ஆஷிஷுடனான எங்களுடைய 22 ஆண்டு கால வாழ்க்கை மிக சந்தோஷமானது. எங்களுக்குள் நிறைய ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக்கொண்டதில்லை. ஒரு கலைஞராக நான் விரும்புவதை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது.
பிரிவுக்கு காரணம் இதுதான்:
என் தேவை என்னவென்பதை உணர்ந்தபோது, ஆஷிஷின் எதிர்கால தேவைகளும், என்னுடைய தேவைகளும் வெவ்வேறு என புரிந்தது. அதுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணமாக இருந்தது. எங்களுடைய மகன் ஆர்த் வித்யார்த்தி, இப்போது வெளிநாட்டில் டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்கிறார். பொதுவாகவே குழந்தையை வளர்ப்பதில் மனைவி தான் பெரும் பங்காற்றுவார்கள். ஆனால் எங்கள் மகனை வளர்த்ததில் ஆஷிஷுக்குதான் பெரும் பங்கு இருக்கிறது. ஆர்த் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் நன்றாக புரிந்துகொண்டார்.
பிரிவை அழகாக மாற்றினார்:
எங்கள் பிரிவை ஆஷிஷ்தான் அழகானதாக மாற்றினார். அவரது ஆதரவு இல்லாவிட்டால் இது நடந்திருக்காது. வழக்கமாக விவாகரத்தில் ஈடுபடும் தம்பதிகளுக்கு நடுவே பல சண்டைகளும், மனக்கசப்புகளும் நடக்கும். ஆனால் எங்கள் விவாகரத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. அதை எளிமையாக்கினார் ஆஷிஷ். இருவரின் பிரிவுக்குப் பின்னர் கஷ்டம் இருந்ததாக நிறைய ஊகங்கள் உலா வருகின்றன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

வெவ்வேறு வாழ்க்கை:
இரண்டு ஆண்டுகளாக நாங்கள் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். அவர் இப்போது இன்னொரு திருமணம் செய்துள்ளார். அதற்காகத் தான் அவர் என்னை விவாகரத்து செய்தார் போன்ற பேச்சுக்கள் முட்டாள் தனமானவை. அவர் எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை. அதேபோல் நானும் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் என் தேவை திருமணம் இல்லை.
துணை தேவைப்பட்டது:
அவருக்கு துணை தேவைப்பட்டதால் மற்றொரு திருமணம் செய்து கொண்டார். நான் என் வாழ்நாளின் பெரும் பகுதியை சகுந்தலா பாருவாவின் மகளாகவும், ஆஷிஷ் வித்யார்த்தியின் மனைவியாகவும் கடந்துவிட்டேன். இப்போது என் வழியில் செல்கிறேன். அதற்காக இத்தனை காலம் என் அடையாளத்தை அழித்துவிட்டேன் என்றில்லை. நான் இப்போது என் அடையாளத்தை வேறு பாதையில் தேடுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











