மஞ்சும்மல் பாய்ஸில் லவ் இருந்திருக்கலாம்.. விமர்சித்த பெண்.. தக் ரிப்ளை கொடுத்த அசோக் செல்வன்
சென்னை: மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் கடந்த சில வாரங்களாகவே ஹாட் டாபிக்காக இருப்பது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். 2006ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 17 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. மேலும் மொத்தமாக 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கிவிட்டது. இந்தச் சூழலில் மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து பெண் ஒருவர் அளித்த விமர்சனத்துக்கு நடிகர் அசோக் செல்வன் தக் ரிப்ளை கொடுத்திருக்கிறார்.
மலையாள திரையுலகுக்கு சமீப காலம் பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். பிரமயுகம், பிரேமலு என மெகா ஹிட் படங்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வணிக ரீதியாக ஹிட் கொடுப்பது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ். சிதம்பரம் ஆர் பொடுவல் இயக்கத்தில் சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்தான் மஞ்சும்மல் பாய்ஸ்.

உண்மை சம்பவம்: டூர் செல்ல பிளான் போடும் நண்பர்கள் பட்ஜெட் காரணமாக கொடைக்கானல் செல்வதும்; அங்கு குணா குகையில் சிக்கிக்கொள்ளும் நண்பரை மற்றவர்கள் எப்படி மீட்டார்கள் என்பதுதான் ஒன்லைன். 2006ஆம் ஆண்டு கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். முதலில் மலையாளத்தில் ஹிட்டான அந்தப் படம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டுக்குள்ளும் பரவி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது.
என்ன காரணம்: சிம்ப்பிள் ஒன்லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமான மேக்கிங்கோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். தமிழ்நாட்டில் அந்தப் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆவதற்கு முக்கிய காரணம் என்றால் க்ளைமேக்ஸில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல். 33 வருடங்களுக்கு முன்பு வெளியான குணா படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல் இப்போது மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பாடலை இயக்குநர் ப்ளேஸ் செய்த இடம் அப்ளாஸை அள்ளியிருக்கிறது.
பாராட்டிய கமல் ஹாசன்: படம் தமிழ்நாட்டிலும் மெகா ஹிட்டானதை அடுத்து கமல் ஹாசன் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். அவர் மட்டுமின்றி தனுஷ், விக்ரம் உள்ளிட்டோரும் இயக்குநர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டினர். படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் இதுபோன்று ஒரு படம் தமிழில் ஏன் வரவில்லை. சிம்ப்பிள் லைனை வைத்துக்கொண்டு விளையாண்டுவிட்டார்களே என்று ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். மேலும் இனியாவது தமிழில் இதுபோன்ற படங்கள் உருவாகுமா என்றும் சமூக வலைதளங்களில் பேச ஆரம்பித்தனர்.
பெண்ணின் விமர்சனம்; அசோக் செல்வன் பதிலடி: அதேசமயம் இதுபோன்ற படம் தமிழில் உருவானால் கண்டிப்பாக அதில் ஒரு காதல், ஹீரோயின், ஃபைட் என்ற டெம்ப்ளேட்டுக்குள் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் என்றும் ட்ரோல் செய்தனர். சூழல் இப்படி இருக்க படத்தை தமிழ்நாட்டு பெண் ஒருவர், "மஞ்சும்மல் பாய்ஸ் படம் நன்றாக இருந்தது. த்ரிலிங்காக இருந்தது. ஆனால் என்ன கொஞ்சம் லவ் இருந்திருக்கலாம், ஃபைட் இருந்திருக்கலாம். அவை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்" என்று கூறினார்.
அந்தப் பெண்ணின் பேச்சை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் நடிகர் அசோக் செல்வன், ஜிபி முத்து இரண்டு கைகளையும் தூக்கி ஆசீர்வதிப்பது போன்ற GIF டெம்ப்ளேட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் மற்ற நெட்டிசன்கள், இந்த மாதிரி ஆட்கள் இருப்பதால்தான் மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரியான படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்றும் தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











