Sometimes OTT: பிரகாஷ் ராஜ் அசோக் செல்வனில் யாருக்கு எய்ட்ஸ்? செம ரியாலிட்டி காட்சிகள்.. டோன்ட் மிஸ்
சென்னை: சில சமயங்களில் (Sometimes) 2018இல் தமிழ் மொழியில் வெளிவந்த தரமான திரைப்படம். இப்படத்தை எழுதி இயக்கியவர் பிரியதர்ஷன். ஐசரி கே. கணேஷ் , பிரபுதேவா, மற்றும் ஏ. எல். விஜய் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் அசோக் செல்வன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சமீர் தாஹீர் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படம் நெட் ஃபிளிக்ஸில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி வெளியானது. இப்படம் 74 வது கோல்டன் குளோப் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து திரைப்படங்களில் ஒன்று.
மொத்தம் 92 நிமிடங்கள் இந்தத் திரைப்படம் ஓடுகின்றது. இதில் இடைவெளி மற்றும் பாடல்கள் என எதுவும் இல்லை. கொஞ்சம் கூட முன் பின் தெரியாத ஏழு பேர் ஒரு இடத்தில் ஒரே காரணத்திற்காக செல்லும்போது அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பாகவே நடித்துள்ளனர். இதுமட்டும் இல்லாமல், ஒவ்வொரு கதாபாத்திரம் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கதாபாத்திரங்களையும் இணைக்கும் கதாபாத்திரமாக அசோக் செல்வன் உள்ளார்.

எய்ட்ஸ் பரிசோதனை எடுக்கச் செல்லும் 7 பேரும் பரிசோதனை எடுக்கும் மைய்யத்தில் சந்திக்கின்றனர். அந்த பரிசோதனை மைய்யத்திற்கு பரிசோதனை செய்ய வந்த அனைவரும் தங்களது ரத்த மாதிரிகளைக் கொடுத்துவிட்டு வெளியே சென்றுவிடுகின்றனர். மாலை 5 மணிக்கு மேல்தான் ரிசல்ட் கிடைக்கும் என்பதால் மற்றவர்கள் சென்றுவிடுகின்றார்கள். வெளியே சென்றவர்கள் அனைவரும் மற்ற பரிசோதனைக்காக வந்தவர்கள். ஆனால், எய்ட்ஸ் பரிசோதனைக்காக வந்த ஏழுபேரும் அங்கேயே இருக்கின்றார்கள்.

எய்ட்ஸ்: முதலில் உரையாடல் பிரகாஷ் ராஜ் மற்றும் அசோக் செல்வனுக்கு இடையில் தொடங்குகின்றது. இவர்கள் இருவரும் இணைந்து, லேபில் இருக்கும் ஸ்ரேயா ரெட்டிக்கு பணம் கொடுத்து தங்களது ரிசல்ட் முடிவுகளை முன்னரே தெரிந்து கொள்ள ப்ளான் போடுகின்றார்கள். அதேநேரத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடியை சமாளிக்க இவர்களின் ப்ளானுக்கு ஓகே சொல்கின்றார் ஸ்ரேயா. ஆனால் பணம் கொஞ்சம் கூடுதலாக கேட்க, அசோக் செல்வனோ அனைவரையும் இணைத்து பணத்தைக் கொடுக்கின்றார்.

க்ளைமேக்ஸ்: ரிசல்ட் வருவதற்குள் அனைவரும் தாங்கள் எய்ட்ஸ் டெஸ்ட் எடுக்க வந்துள்ளோம் என பகிர்ந்து கொள்கின்றார்கள். குறிப்பாக அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவம், எய்ட்ஸ் எப்படியெல்லாம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என திரைக்கதை வழியே சொல்லுகின்றது படம். அதற்குள் ரிசல்ட் வந்து விடுகின்றது. ஸ்ரேயா ரெட்டி கொடுத்த ரிசல்ட்டில் யாருக்கு எய்ட்ஸ் உள்ளது, யாருக்கு எய்ட்ஸ் இல்லை என தெளிவாக கூறாமல், 6 பேருக்கு நெகடிவ், ஒருவருக்கு மட்டும் பாசிட்டிவ் என குறிப்பிட்டு அசோக் செல்வனிடம் கூறி விடுகின்றார். இதனால் அனைவருக்கும் பீதி அதிகமாகி விடுகின்றது. இதனால் மாலை வரை அனைவரும் காத்துக் கொண்டு உள்ளார்கள். இறுதியில் யாருக்கு எய்ட்ஸ் உள்ளது யாருக்கு எய்ட்ஸ் இல்லை என்பதை மிகவும் சுவாரஸ்யமாகக் கொண்டுபோய் ரணமாக முடித்திருப்பார் இயக்குநர் பிரியதர்ஷன். தரமான படம் பார்க்க நினைப்பவர்களுக்கு இந்தப் படம் நல்ல படமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











