லாக்டவுன் காரணமாக.. வீட்டு மொட்டை மாடியில் எளிமையாகத் திருமணம் செய்துகொண்ட பிரபல பிக்பாஸ் நடிகர்!
மும்பை: லாக்டவுன் காரணமாக, தனது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியில் எளிமையாக நடத்தி முடித்திருக்கிறார், பிரபல பிக்பாஸ் நடிகர்.
Recommended Video
கொரோனா காரணமாக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
மே 3 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடும் பாதிப்பு
இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இந்தத் தொற்றுக்கு உலக நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கடுமையானப் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

மணிகண்டன்
இந்த கொரோனா காரணமாக, மக்கள் தங்கள் திட்டங்களை முழுவதுமாக மாற்றி வைத்துள்ளனர். சிலர் திருமணங்களை தள்ளி வைத்துள்ளனர். சிலர் எளிமையாக அதை நடத்தி வருகின்றனர். மலையாள நடிகர் மணிகண்டன் ஆச்சாரி, கடந்த சில நாட்களுக்கு முன் தனது திருமணத்தை எளிமையாக நடத்தினார். கோலிசோடா 2 படத்தில் நடித்தவரும் பிரபல மலையாள நடிகருமான செம்பன் வினோத் ஜோஸ் நேற்று முன் தினம் எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.

பிக்பாஸ் வின்னர்
இந்நிலையில் பிரபல நடிகரும், பிக்பாஸ் வின்னருமான அஷூதோஷ் கவுசிக், இந்த லாக்டவுன் நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இவர், எம்.டி.வியில் வெளியான ரோடீஸ் 5.0 என்ற நிகழ்ச்சியிலும் வெற்றி பெற்றவர். இந்தியில் லால் ரங்க், ஜில்லா காஸியாபாத், படாஸ், திருட்டுப் பயலே படத்தின் இந்தி ரீமேக்கான ஷார்ட் கட் ரோமியோ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

லாக்டவுன்
இவரும் அர்பிதா என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. திருமணத்தை தள்ளி வைக்க வேண்டாம் என்று, குடும்பத்தினர் முடிவு செய்ததை அடுத்து, நொய்டாவில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில் திருமணம் செய்துகொண்டார், அஷூதோஷ்.

நிவாரண நிதி
இந்தத் திருமணம் கடந்த 26 ஆம் தேதி நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். லாக்டவுனில் லாக்டவுன் ஆகிவிட்டேன் என்று கூறியுள்ள அவரும் மணமகளும் மாஸ்க் அணியவில்லை. ஆனால், புரோகிதர் மாஸ்க் அணிந்திருக்கிறார். கிடைத்த மொய்ப்பணத்தை பிரதமர் கொரோனா நிவாரணநிதிக்கு அளித்தாராம்.


Click it and Unblock the Notifications











