சிம்புவுக்கு டாட்டா.. சூப்பர் ஸ்டாருக்கு ஸ்டோரி ரெடி.. உச்சத்தில் பறப்பாரா டிராகன் டைரக்டர்?
சென்னை: ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்தை உடனடியாக இயக்க வேண்டாம் என்கிற முடிவுக்கு நெல்சன் வந்துவிட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு இன்னமும் ஒரு இயக்குநர் கூட அமையவில்லை என்பது தான் கள யதார்த்தமாக உள்ளது.
தொடர்ந்து பல முன்னணி இயக்குநர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு கதை சொல்லி வந்தாலும், அவருக்கு செட்டாகும் அளவுக்கு யாருமே அவரை கவரவில்லை என்கின்றனர்.

சிம்புவை வைத்து 49வது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதையும் ரஜினிக்கு பிடிக்கவில்லையாம். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக அந்த வரிசையில் டிராகன் பட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பெயர் அடிபட்டு வருகிறது.
சிம்புவுக்கு 3 படங்களும் டிராப்?: தேசிங் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், பார்க்கிங் டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் டிராகன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என மொத்தம் 3 படங்களை சிம்பு அறிவித்து இருந்தார். ஆனால், தற்போது அந்த 3 படங்களையும் விட்டு விட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் மட்டுமே சிம்பு நடித்து வருகிறார்.
ரஜினி படத்தை இயக்குகிறாரா அஸ்வத் மாரிமுத்து: எஜிஎஸ் தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்க சிம்பு நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது. காட் ஆஃப் லவ் என்கிற அப்டேட்டுடன் வெளியான அந்த படம் தற்போது கிட்டத்தட்ட டிராப் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கத் தொடங்கி விட்டனர். ஏஜிஎஸ் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தை தான் தயாரிக்கிறது. இந்நிலையில், ரஜினிகாந்துக்கு அஸ்வத் மாரிமுத்து கதை சொல்லியிருப்பதாகவும் புதிய தகவல்கள் கசிந்துள்ளன.
சூப்பர் ஸ்டாருக்கு கதை இல்லையா?: சுந்தர். சி விலகியதில் இருந்தே தொடர்ந்து ரஜினிகாந்தை இயக்குவதற்காக ஒவ்வொரு டைரக்டர்களுடனும் பேச்சுவார்த்தையை ராஜ்கமல் நடத்தி ரஜினியிடம் அனுப்பி வைக்கிறது. ஆனால், சூப்பர் ஸ்டாருக்கு இன்னமும் அவரது மனதை கவரும் வகையில் யாரும் புதுமையான என்டர்டெயின்மென்ட் கதை சொல்லவில்லை என்றே கூறுகின்றனர். டிராகன் படத்தை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்த அஸ்வத் மாரிமுத்து கதை பிடித்து விட்டால், வரும் பொங்கலுக்கு படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர். வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











