என்னது நயன்தாராவுக்கு பாடலா?.. கோபப்பட்டு கிளம்பினாரா அசின்?.. அந்தணன் சொன்ன சீக்ரெட்
மும்பை: அசின் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பிறகு பாலிவுட்டிலும் தடம் பதித்தவர். தனது கரியர் பீக்கில் இருக்கும்போதே தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அதற்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாகவே ஒதுங்கிவிட்டார். இந்தச் சூழலில் அசின் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப் படத்தில் அசின் கதைப்படி கேரள பெண்ணாகவே நடித்து மலையாளம் கலந்த தமிழில் பேசி அசரடித்தார்.முக்கியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

டாப் நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை அவரது நடிப்பு பலமாகவே உணர்த்தியது.
கஜினி: பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடிவருகின்றனர்.
அந்தணன் பேச்சு: இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணன் அசின் குறித்து ஒரு வீடியோவில் பேசுகையில், "கஜினி படத்தில் ஒரு காட்சியை இரவு 9 மணியிலிருந்து காலை 2 மணிவரை எடுக்க தயாரிப்பாளர் அதிக செலவு செய்திருந்தார். பெண்களை ஒரு இடத்திலிருந்து மீட்டு அசின் வரும் காட்சிதான் அது. ஆனால் அந்தக் காட்சியை ஏ.ஆர்.முருகதாஸால் எடுக்க முடியவில்லை.
காரணம்: ஏனெனில், அசினுடன் முருகதாஸ் இரவு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அசின் முருகதாஸிடம், 'இன்னொரு பாடல் எப்போது எடுக்கப்போகிறீர்கள் சார்' என்று கேட்டார். அதற்கு முருகதாஸோ, 'அந்தப் பாடல் உங்களுக்கு இல்லை நயன்தாராவுக்கு' என்று சொன்னதும் அசின் தனக்கு ஏற்பட்ட வருத்தத்தையும், கோபத்தையும் வெளியில் காட்டாமல் கேரவனுக்கு சென்றுவிட்டார். கேரவனுக்குள் சென்ற அவர், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கதவை திறக்கவே இல்லை. பிறகு வெளியே வந்து, எனக்கு உடல்நிலை சரியில்லை அதனால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அதனால் அந்தக் காட்சியை வேறு மாதிரி எடுத்து சமாளித்துவிட்டார் முருகதாஸ். அந்த ஒரு சம்பவத்தால் அசின் மீது முருகதாஸ் ரொம்பவே வருத்தப்பட்டார்" என்றார்.
பாலிவுட் டூ திருமணம்: தமிழில் கஜினி படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார் அசின். ஆனால் தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே மைக்ரோமேக்ஸ் CEO ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











