டிவி வால்யூம் பிரச்சனையில் விஜய் ஆண்டனி பட உதவி இயக்குனர் கொலை
சென்னை: டிவி சப்தம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சென்னையில் உதவி இயக்குனர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சினிமாவில் உதவி இயக்குனராக இருந்தவர் அகில் கண்ணன்(35). விஜய் ஆண்டனி நடித்து வரும் அண்ணாதுரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் அகில்.
திண்டுக்கல்லை சேர்ந்த அவர் சென்னை வளசரவாக்கத்தில் நண்பர்களுடன் 5 பேருடன் சேர்ந்து தங்கியிருந்தார்.

டிவி
வியாழக்கிழமை இரவு அகில் மற்றும் நண்பர்கள் மது அருந்தியுள்ளனர். நண்பர் கார்த்திகேயன்(34) சப்தமாக டிவி பார்த்துள்ளார். நான் தூங்க வேண்டும் சப்தத்தை குறை என்று அகில் கார்த்திகேயனிடம் தெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.

தகராறு
அகில் கோபத்தில் டிவியை ஆஃப் செய்துவிட்டார். இது தொடர்பாக கார்த்திகேயன், அகில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கார்த்திகேயன் அகிலை பிடித்து கீழே தள்ளியுள்ளார்.

மருத்துவமனை
கீழே விழுந்த அகிலுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இதை பார்த்த கார்த்திகேயன் உள்ளிட்ட நண்பர்கள் அகிலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர் அகிலுக்கு தலையில் தையல் போட்டு அனுப்பி வைத்துள்ளார்.

சரண்
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு அனைவரும் தூங்கியுள்ளனர். இரவு 3.30 மணிக்கு கார்த்திகேயன் எழுந்து வந்து பார்த்தபோது அகில் இறந்திருந்தார். இதையடுத்து கார்த்திகேயன் போலீசில் சரண் அடைந்துவிட்டார். அகிலுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











