பொன்னியின் செல்வனில் இணையும் அசுரன் நடிகர்?
Recommended Video
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் தனுஷின் மூத்த மகனாக அபாரமாக நடித்த நடிகர் டீஜேவுக்கு தற்போது மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க டீஜே அருணாச்சலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அசுரன்
வெக்கை நாவலை தழுவி வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுவதும் பல பிரபலங்கள் அசுரன் படத்தை மனதார பாராட்டினர். அசுரன் படத்தை தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
மூத்த மகன்
அசுரன் படத்தில் தனுஷின் மூத்த மகனாக முருகன் எனும் கதாபாத்திரத்தில் டீஜே நடித்திருந்தார். குறைந்த காட்சிகளிலே வந்தாலும், அசுரன் கதையை நகர்த்தி செல்வது அந்த கதாபாத்திரம் தான். ஆடுகளம் நரேனை தியேட்டரில் செருப்பால் அடிக்கும் அந்த காட்சி ஒன்றே போதும், டீஜேவை தமிழ் சினிமா என்றுமே மறக்காது.
ஆல்பம் சிங்கர்
அசுரன் படத்திற்கு முன்பாக, ஆல்பம் பாடல்களை பாடி நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் டீஜே அருணாச்சலம். அவர் குரலில் வெளியான முட்டு முட்டு, எனக்கொரு ஆசை பாடல்கள் இன்றளவும் இணையத்தில் ஆட்சி செய்கிறது. சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியாவுடன் ஒரு ரொமான்டிக் ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் அடுத்த மாதம் தொடங்குகிறது. தாய்லாந்தில் லோக்கேஷன்களை இறுதி செய்துள்ள மணிரத்னம், விரைவில் அதற்கான பணிகளை தொடங்கவுள்ளார்.
ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் என பல நட்சத்திரங்களின் பெயர் பட்டியல் பொன்னியின் செல்வனில் இணைந்துள்ளன. பாண்டிய மன்னனின் மகனாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கவுள்ளதாகவும், டீஜே அருணாச்சலமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மணிரத்னம் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











