பிரபல இயக்குநரால் என் உயிருக்கு ஆபத்து.. டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் பரபரப்பு புகார்!
Recommended Video
திருவனந்தபுரம்: அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை மஞ்சுவாரியர் இயக்குநர் ஸ்ரீகுமாரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக டிஜிபியிடம் புகார் அளித்துள்ளர்.
மலையாள நடிகையான மஞ்சுவாரியார் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மலையாள நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியாவார்.
இந்நிலையில் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் அண்மையில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதில் மஞ்சு வாரியரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

வரவேற்பு
இந்த படம் வெளியான மூன்று வாரங்களுக்குள் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.

இயக்குநர் மீது புகார்
இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிராக கேரள டிஜிபி லோக்நாத் பெஹெராவிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரில் தெகல்கா மேகஸினின் முன்னாள் எம்டியான மேத்யூ சாமூவேலின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்து
இதுதொடர்பான புகாரில் இயக்குநர் ஸ்ரீகுமார் தன்னையும் தனது நண்பர்களையும் சமூக வலைதளங்களில் மிரட்டியும் அவதூறு பரப்பியும் வருகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீகுமார் மேனனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுவதாகவும் மஞ்சு வாரியர் குற்றம் சாட்டியுள்ளார்.

காசோலைகள்
மஞ்சு திருவனந்தபுரத்தில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று தனது கையால் எழுதப்பட்ட புகாரை அளித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியர் தனது புகாரில், ‘மஞ்சு வாரியர் அறக்கட்டளை' என்ற பெயரில் லெட்டர் பேட்களும், அவர் கையெழுத்திட்ட வெற்று காசோலைகளும் ஸ்ரீகுமார் மேனனால் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தனது புகாரில் மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார்.

விளம்பரம்
மேலும் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனுக்கு எதிரான டிஜிட்டல் ஆதாரங்களையும் டிஜிபியிடம் நடிகை மஞ்சு வாரியர் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மஞ்சு, ஸ்ரீகுமார் மேனனின் விளம்பர நிறுவனமான புஷ் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார்.

ஒடியான் படம்
கல்யாண் ஜூவல்லர்ஸ் விளம்பரத்திற்காக, பல முறை மஞ்சு வாரியரை இயக்கியிருக்கிறார் ஸ்ரீகுமார் மேனன். மேலும் ஒடியான் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் ஸ்ரீகுமாரின் புஷ் விளம்பர நிறுவனம், மஞ்சுவின் அறக்கட்டளையையும் மேற்பார்வையிட்டதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

மஞ்சுதான் காரணம்
மேலும் ஒடியான் படம் ரிலீஸான பிறகே தான் இதுபோன்று சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒடியான் படம் தோல்வியடைந்ததற்கு மஞ்சு வாரியர் தான் காரணம் என்று கூறிய ஸ்ரீகுமார் மஞ்சு வாரியருக்கு மார்க்கெட் இல்லை என்றும் அவருடைய அதிர்ஷ்டம் முதல் வாழ்க்கையோடு போய்விட்டதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











