டோலிவுட்டை கலக்க தயாராகும் அசுரன்..சிவசாமியாக வெங்கடேஷ்
சென்னை: தனுஷ் நடித்த அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவிருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இப்படத்தில் அநேகமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது இதுவரையிலும் முடிவாகவில்லை என்று தெரிகிறது.
தனுஷ் நடித்த அசுரன், அக்டோபர் 4ஆம் தேதியன்று தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்த திரைப்படம். மிகவும் அசுரத்தனமாக வெளியாகி மக்களின் பேராதரவை பெற்றது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மலையாள முன்னணி கதாநாயகி மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, டீஜே அருணாச்சலம், ஆடுகளம் நரேன், கென் கருணாஸ் உள்ளிட்ட பலரின் அசத்தலான நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன்.
வெளியான முதல் நாளில் இருந்து இன்று வரை திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வரும் அசுரன் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தின் பாராட்டையும் இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு முக்கியமான திரைப்படம். அவரின் நடிப்பு திறமை மேலும் மேலும் மெருகேறி வருவது இப்படத்தின் மூலம் கண்கூடாக தெரிகிறது.
மஞ்சு வாரியாருக்கு இது தான் முதல் தமிழ் படமாகம். ஆனாலும் மஞ்சு வாரியர் தனது தனித்துவமான வெகு இயல்பான நடிப்பால் பச்சையம்மாளாகவே வாழ்ந்து தமிழ் ரசிகர்களின் மனதை அப்படியே அலேக்காக தூக்கிச் சென்று விட்டார்.
தமிழில் வெற்றி நடை போட்ட அசுரன் திரைப்படம், தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி. எஸ்.தாணு மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவிருக்கிறது.
இப்படத்தை இயக்கப்போவது யார் என்று இதுவரையில் தெரியவில்லை. தனுஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்டார் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழில் வெற்றிநடை போட்டு வரும் அசுரன் நிச்சயம் தெலுங்கு சினிமா உலகையும் ஒரு கலக்கு கலக்கப்போகிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.


Click it and Unblock the Notifications











