அசுரன் முதல் கர்ணன் வரை...தனுசின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் எப்படி...ஓர் அலசல்
சென்னை : அசுரன் முதல் கர்ணன் வரை தனுஷ் நடித்த கடைசி 5 படங்களின் ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் எப்படி இருந்தது, ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு பற்றி இங்கே பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக திரையுலகில் தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வரும் நடிகர் என்றால் அது தனுஷ் தான். தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். நடிப்பதுடன் அடுத்தடுத்த படங்களில் பாடல் பாடி, அதிலும் வெற்றி பெற்று வருகிறார்.
இதனால் தனுஷ் நடிக்கும் படங்கள், ஃபஸ்ட்லுக் போஸ்டர்கள் மீது எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம். அவர் நடித்த கர்ணன் படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு மட்டுமல்ல கடைசியாக தனுஷ் நடித்த 5 படங்களுக்கும் இப்படி தான்.

அசுரன்
தனுஷ், டைரக்டர் வெற்றிமாறனுடன் 3 வது முறையாக இணைந்த படம் அசுரன். இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டர், கையில் ஈட்டியுடன் தனுஷ் பாய்ந்து வருவது போல் இருந்தது. அதில் அவரின் தோற்றம், அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்த ஆடுகளம் படத்தை போல் இருந்தது. இந்த படத்தில் அமைதியான வயதானவர், துடிப்பான இளைஞர் என 2 வேடங்களில் தனுசை, வெற்றிமாறன் காட்டி இருந்தார். இரண்டு கேரக்டர்களிலும் தத்ரூபமாக நடித்த தனுஷிற்கு இது பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

என்னை நோக்கி பாயும் தோட்டா
தனுஷ் படங்களிலேயே நீண்ட தாமதத்திற்கு பின் வெளியான படம், என்னை நோக்கி பாயும் தோட்டா. இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டர் 2016 ம் ஆண்டே வெளியிடப்பட்டது. ஒரே நேரத்தில் பல்வேறு கெட்அப்களில் இருப்பது போன்று ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்டதால், கவுதம் மேனன் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபீசில் ஓரளவிற்கே வசூலை பெற்றது.

பட்டாஸ்
பட்டாஸ் படத்தில் தந்தை- மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடித்திருந்தார். ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கிய இப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரில் ராக்ஸ்டார் போன்ற தோற்றத்தில் இளைமையான தோற்றத்தில் தனுஷ் தோன்றினார். 2020 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் நல்ல வசூலை பெற்றது. படம் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முன்பே பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.

ஜெகமே தந்திரம்
நீண்ட இடைவெளிக்க பிறகு தனுஷ், கேங்க்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள இந்த படத்திலும் இரு மாறுபட்ட வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டருடன், சந்தோஷ் நாராயணனின் இசையில் அமைந்த ஸ்பெஷல் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

கர்ணன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் ஃபஸ்ட்லுக் போஸ்டரில், கையில் ரத்த கறையுடன், விலங்குடன் தனுஷ் நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் அதிகம் நிறைந்த இந்த படத்தில் சமூகத்திற்கு மெசேஜ் ஒன்றையும் மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











