இளையராஜாவிற்கு பாராட்டுவிழா.. ரஜினி, கமல் என்ன பேசுவார்கள்.. விஜய்யின் திருச்சி பிரச்சாரம்!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்து இசையின் ராஜாவாக திகழ்ந்து வருகிறார். அவரை பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெறுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த விழாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
கடந்த மார்ச் மாதம் லண்டனில் சிம்பொனி இசையை நிகழ்த்திய இளையராஜாவுக்கு, அவரது அரை நூற்றாண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணிக்கு சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் என்ற பெயரில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பிறமொழி திரைக்கலைஞர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இளையராஜாவின் பொன் விழாவுக்கு வரும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களை அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசின் சார்பில் பிரத்யேக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொண்டு பேச இருப்பதால் அவர்களின் பேச்சு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சியில் பிரச்சாரம்: அதேவேலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று முதல் திருச்சியில் இருந்து தனது அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கி மக்களை சந்தித்து பேச உள்ளதால், அது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக
நவீன ரக பேருந்தை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பேருந்தில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், நவீன கேமராக்கள், ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளது.
மக்கள் சந்திப்புக்காக காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார் விஜய். அவரை வரவேற்க தவெக தொண்டர்கள் காலை முதலே திருச்சி விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.அவரது பிரசார வாகனம் பனையூரில் இருந்து நேற்று மாலை திருச்சியை நோக்கி புறப்பட்டுவிட்டது. பிரச்சார வாகனத்தில் த.வெ.க. புதிய லோகோவில், உங்க விஜய் நான் வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டு உள்ளது. இதில் விஜய் என்ன பேச போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிற்னர்.
தனுஷ் பேச்சு: அதே போல, நாளை தனுஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இட்லிகடை திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழா ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையை மட்டும் கொண்டாடும் விழாவாக இல்லாமல், இட்லி கடை படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யும் இன்பன் உதயநிதியை அறிமுகம் செய்யும் விழாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இட்லி கடை விழாவில் தனுஷ் என்ன பேசப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இசை வெளியீட்டு விழா நாளை 14 ஆம் தேதி சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இட்லிகடை படத்தில் தனுஷ், அருண் விஜய், நித்யா மேனன், ஆர். பார்த்திபன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் அக்டோபர் 1ம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











