தேசிய விருது பெற்ற படத்தின் இயக்குனருடன் இணையும் அதர்வா முரளி
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் அதர்வா. இவர் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன்.
நல்ல நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உள்ளது.
அடுத்ததாக அதர்வா நடிக்கவுள்ள புதிய தமிழ் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிடப்பில் உள்ளது
அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. ராஜா மோகன் இயக்கத்தில் அட்ரஸ் படத்திலும் நடித்துள்ளார்.

தமிழ் ரீமேக்
இதுமட்டுமின்றி Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தில் அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது. இதுமட்டுமின்றி கடந்த ஆண்டு மலையாளம் மொழியில் வெளியான அஞ்சாம் பாத்திரா படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா நடிக்கவுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களவாணி, வாகை சூடவா
களவாணி, வாகை சூடவா போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் சற்குணம். இரண்டு படங்களுமே வெளியான போது கமர்ஷியல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். வாகை சூடவா திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சர்குணம் அடுத்ததாக அதர்வாவை வைத்து படம் இயக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாத முடிவில்
அதர்வா - சற்குணம் இணையும் திரைப்படம் விளையாட்டு சார்ந்த படமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடக்கும் என தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











