காதலையும் சொல்ல முடியாது, காரணத்தையும் சொல்ல முடியாது.. 'இதயம் முரளி' டிரைலர் அவுட்!
சென்னை: தமிழ் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த முரளியின் மகன் அதர்வா, தனது தந்தையின் நடிப்பில் வெளியான 'இதயம்' படப் பின்னணியை மையமாக உருவாகி இருக்கும் 'இதயம் முரளி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா மற்றும் கயாடு லோஹர் ஜோடி சேர்ந்துள்ள இத்திரைப்படம் வரும் ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் ஃபஹத் பாசில், நட்டி நட்ராஜ், தமன், பிரீத்தி முகுந்தன், சின்னி ஜெயந்த், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட் செல்வம், ரக்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதயம் முரளி டிரைலர்: 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலரின் ஆரம்பமே கவித்துவமான வரிகளோடு ஆரம்பிக்கிறது. என்ன மாதிரி காதலைச் சொல்ல முடியாதவங்க எத்தனையோ பேரு இருக்காங்க.. அவங்களால காதலையும் சொல்ல முடியாது, அதற்கான காரணத்தையும் சொல்ல முடியாது காதல் வசனத்தோடு டிரைலர் தொடங்குகிறது. 90களில் வெளியான 'இதயம்' படத்தில் மறைந்த நடிகர் முரளி எப்படித் தனது காதலை இறுதிவரை சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே பூட்டி வைத்திருப்பாரோ, அதே போன்ற ஒரு அழுத்தமான ஒன்-சைட் லவ் கதைக் களத்தில் அதர்வா நடித்துள்ளார் என்பதை டிரைலர் பார்க்கும்போதே தெளிவாகப் புரிய வைக்கிறது.

அதர்வா முரளி: பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமாகி பரதேசி, சண்டிவீரன் மற்றும் கடந்த ஆண்டு சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பராசக்தி படம் வரை தன் அசாத்திய நடிப்பால் மிரட்டிய அதர்வாவிற்கு, இப்படம் அதர்வாவிற்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். இதயம் முரளி திரைப்படத்தின் தமிழ்நாட்டு விநியோகஸ்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து தமன் பாட, பாடலாசிரியர் விவேக் எழுதிய 'கட்டழகி' பாடல் வெளியாகி சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. காதல், எமோஷன், தமனின் பின்னணி இசை என அனைத்தும் கச்சிதமாகக் கலந்துள்ள 'இதயம் முரளி' படத்தின் டிரைலர், தியேட்டருக்குச் செல்லும் ஆவலை ரசிகர்களிடம் தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications