அப்போ அஜித் படம் இல்லையா? மீண்டும் பாலிவுட் நடிகரை இயக்கப் போறாராம் அட்லீ.. என்ன கதை தெரியுமா?
மும்பை: அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லீ இயக்கப் போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வரும் இயக்குநர் அட்லீ அடுத்ததாக மீண்டும் ஒரு பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் அஜித்தின் ஏகே 62வை இயக்கப் போவது யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குநர் மகிழ் திருமேனி, அட்லீ, விஷ்ணுவர்தன் மற்றும் வெங்கட் பிரபு என இயக்குநர்கள் லிஸ்ட் நீண்டுக் கொண்டே போகிறது.
விரைவில், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விஷ்ணு வர்தன் மற்றும் அட்லீ மீண்டும் பாலிவுட்டில் பிசியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோலிவுட் டு பாலிவுட்
இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த அட்லீ ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர், நடிகர் விஜய் உடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என 3 படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக பிரபலமானார். அதன் பின்னர் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

ஜவான் ரிலீஸ் தேதி
ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் தீபிகா படுகோன் இருவரும் கேமியோ ரோலில் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும், ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லீயின் லக்கி சார்ம்
தென்னிந்திய திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா இயக்குநர் அட்லீயின் லக்கி சார்ம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். டார்லிங் என்றே நயன்தாராவை அட்லீ அழைத்து வருவதாக அவரே கூறியுள்ளார். பாலிவுட்டில் ஷாருக்கான் படத்திலேயே அட்லீ நயன்தாராவை அறிமுகப்படுத்த உள்ளார். ஜவான் படத்தின் இறுதிக்கட்ட ஷெட்யூலுக்காக தற்போது நயன்தாரா மும்பையில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் படத்தை இயக்குகிறாரா அட்லீ
ஜவான் படம் ஜூன் மாதம் வெளியாக உள்ள நிலையில், தளபதி 68 படத்தை இயக்குநர் அட்லீ இயக்கப் போகிறார் என்றும் அஜித்தின் ஏகே 63 படத்தை லைகா தயாரிப்பில் இயக்கப் போவதாகவும் தகவல்கள் தீயாக பரவின. ஆனால், தற்போது அடுத்த படமும் பாலிவுட்டில் தான் என இன்னொரு ஹாட் அப்டேட் டிரெண்டாகி வருகிறது.

தெறி ரீமேக்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கை தான் அடுத்து அட்லீ பாலிவுட்டில் இயக்கப் போவதாக கூறுகின்றனர். தளபதி 67 படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு அடுத்து தான் விஜய் படத்தை அட்லீயால் இயக்க முடியும். மேலும், பதான் வெற்றியைத் தொடர்ந்து ஜவான் படமும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து விட்டால் பாலிவுட்டில் அட்லீ பிசியாகி விடுவார்.

வருண் தவான்
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்த தெறி படத்தை அட்லீ இந்தியில் ரீமேக் செய்வது உறுதியானால் அந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கப் போவதாகவும் சமந்தா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அட்லீயின் அடுத்த பட அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











