Exclusive : தளபதி 63.. அட்லி போட்ட ‘அந்த’ முக்கியமான நிபந்தனை: சஸ்பென்ஸ் வைக்கும் கதிர்
விஜய் 63 படத்தில் நடிக்க இயக்குனர் அட்லி தனக்கு நிபந்தனை விதித்ததாக நடிகர் கதிர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : விஜய்யின் 63வது படத்தில் நடிக்க தனக்கு இயக்குனர் அட்லி முக்கிய நிபந்தனை விதித்ததாக நடிகர் கதிர் தெரிவித்துள்ளார்.
கதிர், சிருஷ்டி டங்கே, லகுபரண் உள்ளிட்டோர் நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக உள்ள படம் சத்ரு. நவீன் நஞ்சுண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதிர் இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
சத்ரு ரிலீஸ் வேலை, தளபதி 63 படப்பிடிப்பு என பிஸியாக இருந்த கதிரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து

க்ரைம் திரில்லர்:
"சத்ரு ஒரு க்ரைம் திரில்லர் படம். போலீசுக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் ஆட்டம்தான் படம். முதல் காட்சியில் இருந்து படம் விறுவிறுப்பாக இருக்கும். சிருஷ்டி டங்கே இதில் எனக்கு ஜோடியாக நடித்துள்ளார். வில்லனாக லகுபரண் நடித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரம்:
ஹீரோ அளவுக்கு, வில்லனுக்கும் இதில் முக்கியத்துவம் இருக்கும். அதனால் முதலில் கதையை படித்தவுடன், வில்லனாக நடிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என சமரசம் செய்தார். அந்த அளவுக்கு வில்லன் கதாபாத்திரம் இதில் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

பரியேறும் பெருமாள்:
பரியேறும் பெருமாள் எனக்கு வாழ்நாள் படம். அது போன்ற ஒரு படம் மீண்டும் எனக்கு கிடைக்குமா எனத் தெரியவில்லை. கிருமி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பெரிதாக பேசப்படும் என எதிர்பார்த்தேன்.

எதிர்பார்ப்பு இல்லை:
ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனால் பரியேறும் பெருமாள் மீது நான் எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை. ஆனால் மக்கள் அந்த படத்தை மிகப்பெரிய இடத்தில் தூக்கி வைத்துவிட்டார்கள்.

திருநங்கைகளின் வாழ்க்கை:
பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு எனது நடிப்பில் வெளிவந்த படம் சிகை. ஒரு திருநங்கையாக அதில் நான் நடித்தேன். அந்த படத்தை இணையத்தில் வெளியிட்டோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. திருநங்கைகளின் வாழ்க்கையை, வலியை அது உணர்த்தும்.

தளபதி 63:
அட்லி எனது நீண்ட கால நண்பர். ஆனால் இதுவரை நான் அவரிடம் வாய்ப்பு கேட்டதில்லை. ஒருநாள் திடீரென என்னை அழைத்து, ‘தளபதி 63 படத்தில் நடிக்கிறியா?' எனக் கேட்டார். இதென்ன கேள்வி, கண்டிப்பாக நடிக்கிறேன் எனக் கூறினேன். ஆனால் அவர் ஒரு கண்டிசன் போட்டர். எந்த முடிவாக இருந்தாலும், மூன்று நாட்கள் கழித்து தான் சொல்ல வேண்டும் என கூறிவிட்டார். பிறகு மூன்று நாட்கள் கழித்து தான் சம்மதம் சொன்னேன்.

நன்றி:
எனது சினிமா வாழ்வில் தளபதி 63 படமும் மிக முக்கியமானது. விஜய் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. நான் நினைத்ததைவிட நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி", என இவ்வாறு கதிர் கூறினார்.
கதிரின் இந்தப் பேட்டியை வீடியோவாகப் பார்க்க...


Click it and Unblock the Notifications











