சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்.. வணங்கான் படப்பிடிப்பில் பஞ்சாயத்து!
சென்னை : பாலாவின் வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் பாலா இப்படத்திற்கு எந்த நேரத்தில் வணங்கான் என்று பெயர் வைத்தார் என்று தெரியவில்லை, பெயர் வைத்த நாளில் இருந்தே படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
வணங்கான் படத்தில் நடித்து வந்த சூர்யா, படத்திலிருந்து அதிரடியாக விலகினார்.

பாலாவின் வணங்கான்
பல வெற்றிப்படத்தை கொடுத்துள்ள பாலா, சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை துவங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூர்யாவுக்கும் பாலாவுக்கும் சண்டை என பலவிதமான தகவல்கள் பரவின.

சூர்யா விலகினார்
இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட பாலா, வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். வணங்கான் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களினால் இக்கதை சூர்யாவிற்கு பொருத்தமாக இருக்காது என எண்ணுகின்றேன். இக்கதையின் மீதும், என் மீதும் சூர்யா மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார். அதை நான் கெடுக்க விரும்பவில்லை. எனவே இப்படத்திலிருந்து சூர்யா விலகுவதாக நாங்கள் ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம் என தெரிவித்து இருந்தார்.

கன்னியாகுமரியில் படப்பிடிப்பு
இதன் பின் சூர்யா நடித்த கேரக்டரில் நடிகர் அருண் விஜய் கமிட்டாகி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கேரளாவை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜிதின் என்பவர் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

துணை நடிகை மீது தாக்குதல்
இந்த நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் படபிடிப்பு முடிந்த நிலையில், துணை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கூறப்பட்ட சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், துணை நடிகை லிண்டா ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் சம்பளத்தை கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ஜிதன், லிண்டாவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால், வணங்கான் படப்பிடிப்பு தளத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











