ஏகே61 படத்தோட அடுத்தடுத்த அப்டேட்கள்... ஆடியோ உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்!
சென்னை : நடிகர் அஜித்தின் ஏகே61 படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியான வண்ணம் உள்ளது.

நடிகர் அஜித்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் மிகுதியான வரவேற்பை பெற்ற படம் வலிமை. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், ரசிகர்கள் படத்தை கொண்டாடினர்.

வலிமை படம்
படத்தை ஹெச் வினோத் இயக்கியிருந்த நிலையில், போனிகபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணி வலிமை படத்தில் இரண்டாவது முறையாக இணைந்திருந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் இந்தப் படம் பான் இந்தியா படமாக ரிலீசானது.

ரூ.200 கோடி வசூல்
படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளது. இதையடுத்து தற்போது இந்த மூவர் கூட்டணி மீண்டும் ஏகே61 படத்தில் இணைந்துள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்கென அங்கு மிகவும் பிரம்மாண்டமான அளவில் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டு வருகிறது.

ஏகே61 படத்தின் சூட்டிங்
இந்த படத்தின் சூட்டிங் மற்றும் பூஜை ஐதராபாத்தில் போடப்பட்டு பலகட்ட படப்பிடிப்பையும் மேற்கொண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீசாக உருவாக உள்ளதாக முன்னதாக போனிகபூர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏகே61 படத்தின் ஆடியோ உரிமை
படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வரும் நிலையில், படத்தின் இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை பிரபல இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

ஆடியோ உரிமையை வாங்கிய சோனி
சோனி இசை நிறுவனம் ஏகே 61 படத்தின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. படத்தின் போஸ்டர்களை படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கோட் சூட்டில் நீண்ட தாடியுடன் கூலர்ஸ் சகிதம் அஜித்தின் ஒரு கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











