’ஜெயிலர்’ படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க ஆடிஷன்.. இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சம் பறித்த மர்ம கும்பல்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்.
ரஜினியுடன் நடிப்பது பல நடிகர், நடிகைகளின் பெருங்கனவு. அதற்காக எதையும் செய்ய தயாராக இருப்பார்கள்.
இதைப்பயன்படுத்து ஜெயிலரில் ரஜினியின் மகளாக நடிக்க வைப்பதாக ஆடிஷன் நடத்தி இளம்பெண்ணிடம் ரூ.10 லட்சத்தை அபேஸ் செய்துள்ளது மோசடி கும்பல் ஒன்று.

ரஜினியுடன் வாய்ப்புக்காக அலையும் இளம் நடிகர் நடிகைகள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம். இவருடன் ஒரு படத்தில் நடித்துவிட்டால் திரையுலக வாழ்க்கையே திரும்பி விடும் என பல முன்னணி நடிகர் நடிகைகள் கூட ஆசைப்படுவர். அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடிக்க கிடைத்த வாய்ப்புக்காக ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை உதறி தள்ளினார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதில் நடித்த நடிகை சாய் பல்லவி பெரும் புகழ் பெற்றார். ரஜினிக்காக இந்த வாய்ப்பை உதறிய கீர்த்தி சுரேஷ்போல் பலர் ஆவலுடன் உள்ளனர்.

ஜெயலர் படத்தில் ரஜினின் மகளாக நடிக்க ஆடிஷன் நடத்தி மோசடி
ரஜினிகாந்த் நடிக்க நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக வயதான வேடத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். ரஜினிக்கு மகளாக இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது என பிரபல சினிமா நிறுவனம் பெயரில் அறிவிப்பு வெளியானது. இதைப்பார்த்த மும்பையைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் அவர்களை அணுகி விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் ஹைதராபாத்தில் வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தங்களுக்குச் சொந்தமான மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது, நாங்கள் ரஜினிகாந்த் மகளாக நடிப்பதற்கு ஒரு இளம் பெண்ணை தேடுகிறோம் என்று கூறியுள்ளனர்.

ரஜினியின் மகளாக சைபர் ஹேக்கராக வேடம்
பின்னர் அவரை அலுவலகத்து வரவழைத்த அவர்கள் ரஜினிகாந்த மகளாக முக்கியமான பாத்திரம் அது, ரஜினியின் மகளாகவும் சைபர் ஹேக்கராகவும் நடிக்க வேண்டும், ஆங்கிலம் சரளமாக பேசவும், மாடர்னாகவும் இருக்கவேண்டும் என மேக்கப் டெஸ்ட், கேமிரா ஆங்கிள், ஆடிஷன் நடத்தியுள்ளனர். பின்னர் சில நாள் கழித்து அவரை தேர்வு செய்துள்ளதாக இளம்பெண்ணுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். கம்பெனி லெட்டர் ஹெட்டில் அதற்கான ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.

சாமர்த்தியமாக ஏமாற்றிய கும்பல்
பின்னர் சில நாள் கழித்து வரவழைத்த அவர்கள் பாஸ்போர்ட், மற்றும் இதர செலவுகள் உள்ளது அதற்கு பணம் கட்ட வேண்டும் என சிறுக சிறுக 10 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். மேலும் பணம் கேட்டபோது அந்தப்பெண் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இன்னும் பணம் தந்தால் ரஜினியுடன் மட்டுமல்ல அடுத்து எடுக்கும் ஆர்சி15 படத்திலும் வாய்ப்புண்டு, முடியாதுன்னு சொன்னால் 10 லட்சம் திருப்பிக் கிடைக்காதுன்னு சொல்லி மிரட்டி அனுப்பியுள்ளனர். இளம் பெண் வீட்டில் வந்து விஷயத்தை கூற வீட்டில் உள்ளவர்கள் போன் செய்த போது போன் சுவிட்ச் ஆஃப், அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

19 ஆண்டுகால பிரபல் நிறுவனம் பெயரில் ஆடிஷன்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மும்பை தஹிசார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதன் உரிமையாளர்கள் பியூஷ் ஜெயின் மற்றும் மந்தன் ரூபரேல் என்று குறிப்பிட்டு அவர்கள் கொடுத்த ஆவணங்களையும் கொடுத்து புகார் அளித்துள்ளார். ஆவணங்களை போலீஸார் பரிசோதனை செய்தபோது அப்படிப்பட்ட நிறுவனம் ஐதராபாத்தில் கடந்த 19 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் அதில் பியூஷ் ஜெயின், மந்தன் ரூபேல் என்று யாரும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

ரஜினியுடன் நடிக்க வைப்பதாக கூறி 3 நாளில் ரூ.10 லட்சம் அபேஸ்
இத்தனை மோசடியையும் அவர்கள் 3 நாளில் செய்துள்ளனர். ஐதராபாத்தின் பிரபல நிறுவனம் பற்றி தெரிந்து அதை வைத்து ஆடிஷன் நடத்தி மோசடி செய்துள்ளனர். இவர்களிடம் அந்த இளம்பெண் மட்டும் ஏமாந்தாரா அல்லது எத்தனை பேர் எத்தனை மாநிலங்களில் எத்தனை லட்சங்களை ஏமாந்தார்கள் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் தஹிசார் போலீசார் 419, 420 (மோசடி) 465 (போலி ஆவணங்கள் தயாரிப்பு), 468 (ஏமாற்றும் நோக்கத்திற்காக மோசடி செய்தல்), 34 (34) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











