களத்தில் ரெட் ஜெயண்ட்! ஆகஸ்ட் 15இல் டிமான்ட்டி காலணி! பா.ரஞ்சித்தின் தங்கலானுக்கு குடைச்சல் ஆரம்பமா?
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு முதல் 6 மாதத்தில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. பொங்கலுக்கு மட்டும் தனுஷின் கேப்டன் மில்லர் படம் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் ரிலீஸ் ஆன படங்கள் அனைத்துமே வளர்ந்து வரும் கதநாயகர்களின் படங்கள்தான். இதனால் தியேட்டர்களில் கூட்டம் கொஞ்சம் ஓ.கே.வாகத்தான் இருந்தது. இரண்டாம் பாதியில் மிகப்பெரிய கதாநாயகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகின்றது.
இதில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் படம் வொர்க் அவுட் ஆகவில்லை. இதனால் படம் படுதோல்வியைச் சந்தித்தது என விமர்சகர்கள் பலர் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்து வெளியாகவுள்ள மிகப்பெரிய ஸ்டாரின் படம் என்றால் அது, தனுஷின் 50வது படமான ராயன் படம்தான். இந்த படம் வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

இதையடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது, விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படம்தான். இந்த படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் உடன், பார்வதி திருவேத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆகஸ்ட் 15: இந்நிலையில் படத்தின் ட்ரைலரும் முதல் பாடலும் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் பல ஆண்டுகளாக ரிலீஸ்க்கு காத்துக்கொண்டு இருந்த பிரசாந்தின் அந்தகன் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு தெரிவித்தது. இதுவே பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால் விக்ரம் மற்றும் பிரசாந்த் நெருங்கிய உறவினர்கள் என்பதால் இருவரது படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யப்படுவது என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிமான்டி காலணி 2: இந்நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி டிமான்டி காலணி படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அருள் நிதி நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை பிடிஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் படம் ரிலீஸ் ஆகின்றது என்பதும், அதைத்தொடர்ந்து அந்தகன் ரிலீஸ் ஆகின்றது என்பதும் பலருக்கு ஆச்சரியத்தை தந்த நிலையில் தற்போது டிமான்டி காலணி 2 படம் ரிலீஸ் என்பது பலருக்கு பலவிதமான சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
பா. ரஞ்சித்துக்கு நெருக்கடி: குறிப்பாக, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு நினைவேந்தல் நடத்தப்பட்டது. அதில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித் ஆளும் திமுக அரசை மிகவும் காட்டமாக விமர்சித்து பேசினார். இதனால் பா. ரஞ்சித்துக்கு நெருக்கடி கொடுக்கவே தங்கலான் படத்திற்கு எதிராக டிமான்டி காலணி 2 படத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்வதாக பேச்சுக்கள் பலமாக அடிபடுகின்றது.

வாரிசு: ஏற்கனவே விஜய்யின் அரசியல் வருகை குறித்து தெரிந்து கொண்ட உதயநிதி, வாரிசு படத்திற்கு எதிராக துணிவு படத்தினை ரிலீஸ் செய்தார். குறிப்பாக தமிழ்நாட்டில் வாரிசு படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கையை விடவும் துணிவு படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகள் அதிகம். இதேநிலை தங்கலான் படத்திற்கும் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் இப்போது அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











