ஆட்டோகிராஃப் சின்ன வயது சேரனை நியாபகம் இருக்கா?.. எல்லோருக்கும் செம சர்ப்ரைஸ்.. ரீ ரிலீஸ் களைகட்டுது
சென்னை: கோலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். சேரன் இயக்கி, நடித்திருந்த அந்தப் படம் அத்தனை காதலர்களுக்கு பெரிய அனுபவத்தை கொடுத்தது. தற்போது 21 வருடங்கள் கழித்து அந்தப் படம் ரீ ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி நேற்று படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். அப்போது படத்தில் சின்ன வயது சேரனாக நடித்த சிவபிரகாசன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பாரதி கண்ணமா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சேரன் கோலிவுட்டில் முக்கியமான சினிமாக்களை இயக்கியவர். அவர் இயக்கியதிலேயே ஆட்டோகிராஃப் படத்துக்கென்று எப்போதுமே தனித்த இடம் உண்டு. காதல் ஜானரில் அந்தப் படம் உருவாகியிருந்தாலும் அதன் பரிணாமங்களையும், பெண் தோழியின் முக்கியத்துவத்தையும் அவ்வளவு அழகாகவும், இயல்பாகவும் பேசிய படம்.
பல ஹீரோக்களிடம் சென்ற படம்: இப்படத்தில் முதலில் சேரன் கதாநாயகனாக நடிக்க வேண்டியதே இல்லை. விஜய், விக்ரம், அரவிந்த் சாமி, பிரபுதேவா ஆகியோரிடம் இந்தக் கதை சொல்லப்பட்டபோது அவர்கள் ஏனோ நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை. இதனையடுத்து வேறு வழியே இல்லாமல் சேரனே ஹீரோவாக நடித்துவிட்டார். அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தபோது யாருக்குமே இப்படத்தின் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை என்பதுதான் உண்மை.

படம் மெகா ஹிட்: ஆனால் தனது இயல்பான நடிப்பு மற்றும் கதைக்கு தேவையான நடிப்பை தானும் நடிகர்தான்; தான் நடித்தும் ஒரு படம் மெகா ஹிட்டாகும் என்பதை உணர்த்தியிருந்தார். படம் வெளியாகி இவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றதை பார்த்து இந்தக் கதையை வேண்டாம் என்று ஒதுக்கிய நடிகர்கள் கண்டிப்பாக வருத்தப்படத்தான் செய்திருப்பார்கள். படத்தில் இசை, காட்சியமைப்புகள், எமோஷனல் என அத்தனையும் க்ளிக்காகி ஒரு மேஜிக்கையே நிகழ்த்தியது படம்.
சின்ன வயது சேரன்: படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்றாக அமைந்ததில் சின்ன வயது சேரனாக நடித்த பையனும்தான். கிட்டத்தட்ட சேரனின் முக அமைப்பை ஒத்திருந்த அவரும் அவ்வளவு அற்புதமான நடிப்பை கொட்டியிருந்தார். இப்படி ஏகப்பட்ட ப்ளஸ்ஸுகளை கொண்டிருக்கும் ஆட்டோகிராஃப் திரைப்படம் 21 வருடங்கள் கழித்து தற்போது ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதனையொட்டி படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
சர்ப்ரைஸ் கொடுத்த சிவபிரகாசம்: இந்த நிகழ்வில் சின்ன வயது சேரனாக நடித்த சின்ன சேலத்தை சேர்ந்த சிவபிரகாசமும் கலந்துகொண்டார். அவரை மேடையில் ஏற்றி மரக்கன்று கொடுத்தார் சேரன். மேலும் பேசிய அவர், "சிவபிராகசத்தை இந்தப் படத்தில் நடிக்க வைத்ததே பெரிய கதை. நான் எனது சிறு வயது ஃபோட்டோ ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டேன். மேலும் ஆட்டோகிராஃப் படத்தில் சிறு வயது சேரனாக நடிக்க நடிகர்கள் தேவை என்றும் தெரிவித்திருந்தேன்.
ஆளே மாறிட்டாரே: அப்போதுதான் சிவபிரகாசம் நடிக்க வந்தார்" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய சிவபிரகாசம், "முதலில் நான் நடிப்பதற்கு எனது வீட்டில் யாருமே ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு சேரன் சார் ஃபோன் செய்து பேசினார். அதுமட்டுமின்றி ஒரு உதவி இயக்குநர் வந்து எங்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கிவிட்டார். உதவி இயக்குநர்கள், சேரன் சார் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு சொல்லிக்கொடுத்து என்னை நடிக்க வைத்தார்கள்" என்றார். இந்த நிகழ்ச்சியில் ஆளே அடையாளம் தெரியாமல் நெடுநெடுவென்று வளர்ந்து வந்திருந்த சிவபிரகாசத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டார்கள். இப்போது அவர் சினிமாவுடனான தொடர்பை விட்டு சொந்த ஊரில் தொழில் செய்து குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











