யாரும் தொடத்தயங்குகிற கருப்பொருள் - அவன் அவள் அது!

By Shankar

- கவிஞர் மகுடேசுவரன்

இரண்டாயிரத்திற்கு முந்தி வெளியான படங்களை அவற்றின் ஆக்கத் திறன்களுக்காக மதிப்பிடுவது ஒரு பக்கமிருக்கட்டும். அவற்றின் கதைத் தன்மைக்காகவும் பொருட்படுத்தப்பட வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது. சுவையான கூறுகளை எடுத்துக்கொண்டு அவற்றின்மீது நன்கு புனையப்பட்ட திரைக்கதைகள் அவை. அக்காலத்துச் சூழல், மொழி, பண்பாடு, மதிப்பீடுகள் போன்றவற்றின் தடயங்களையும் அவை கொண்டிருக்கின்றன. வளர்ந்துவரும் அறிவியல் வாய்ப்புகள் உறவுகளுக்கிடையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தின என்பதைக்கூட ஒரு படத்தின் உள்ளடக்கமாக்கி எடுத்திருக்கிறார்கள்.

Avan Aval Athu, Another 80's classic

'அவன் அவள் அது' என்று ஒரு படம். 'இல்லம் சங்கீதம் ...' என்னும் புகழ்பெற்ற பாடல் அப்படத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையில்லாமலேயே செயற்கை முறையில் கருவுறுதல், வாடகைத் தாய் போன்ற கனமான பொருள்களை எடுத்துக்கொண்டு ஆக்கப்பட்ட படம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டில் 'செயற்கை முறையில் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம்' என்பதை ஓர் அறிவியல் செய்தியாகக் கூறினால்கூட கடுமையாகக் கண்டித்திருப்பார்கள். குமுகாய இறுக்கங்கள் சற்றும் தளராதிருந்த கடைசிக் காலகட்டம் அது. பெண்ணின் தாய்மையை உரசிச் செல்லும்படி அறிவியலின் பெயரால்கூட கதைகட்ட முடியாது. ஆனால், மிகுந்த துணிச்சலோடு முகச்சுழிப்புக்கு இடமில்லாதபடி உணர்வுப் போராட்டங்களை மட்டுமே முதன்மைப்படுத்தி 'அவன் அவள் அது' எடுக்கப்பட்டிருக்கிறது. சிவக்குமார், இலட்சுமி, ஸ்ரீபிரியா ஆகிய மூவர்க்கும் கதையின் மைய வேடங்கள்.

Avan Aval Athu, Another 80's classic

இலட்சுமி என்ற நடிகையைத் தமிழ்த் திரையுலகம் எவ்வாறு நினைவு கூர்கிறது என்பதைப் பற்றி எதுவுமே துலக்கமாகத் தெரியவில்லை. இத்தலைமுறையினர்க்கு அவர் நடிப்பின்மீது எவ்வொரு மனப்பதிவும் இருப்பதாகவும் நான் நம்பவில்லை. இன்றைக்குப் பல்வேறு இலட்சுமிகள் மஞ்சள் விளக்கொளிக்கு வந்துவிட்டதால் மூத்த நடிகையரை முதலாமவராக நினைவிற்கொள்வதும் இயலாது என்றே நினைக்கிறேன். ஆனால், தமிழ்த்திரை கண்டெடுத்த முதன்மையான பத்து நடிகையருள் இலட்சுமிக்கும் இடமுண்டு. தென்னித்தியப் படங்கள் அனைத்திலும் அவருடைய பங்களிப்பு மிகச்சிறப்பாகவே இருந்திருக்கிறது. ஏறத்தாழ இருபதாண்டுக் காலம் அவருடைய கலைப் பங்களிப்பு ஏறு வரிசையில் நகர்ந்தது.

Avan Aval Athu, Another 80's classic

'அவன் அவள் அது' திரைப்படத்தில் சிவக்குமாரும் இலட்சுமியும் கணவன் மனைவி. திருமணமாகியும் அவர்கட்குக் குழந்தைப்பேறு இல்லை. பெயரனைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் சிவக்குமாரின் தந்தை காத்திருக்கிறார். கருச்சிதைவுக்கு ஆளான நிலையில் இலட்சுமிக்கு இனி குழந்தைப் பேற்றுக்கு வழியில்லை என்னும் நிலை. மருத்துவருடனான உரையாடலில் செயற்கை முறையில் கருவூட்டல் தொடர்பான விளக்கம் கிடைக்கிறது. இலட்சுமியின் வீட்டுக்குப் பாலூற்றும் பால்காரர்கூடத் தம் பசுக்கள் செயற்கை முறைக் கருவூட்டலால்தான் கன்றை ஈனுகின்றன என்கிறார். "உன் கணவனின் உயிரணுவை ஏற்று பிள்ளை பெற்றுத் தர ஒப்புக்கொள்கிற ஒரு பெண்ணோடு வா... உங்களுக்குப் பிள்ளையுண்டாக்கித் தரவேண்டியது என் பொறுப்பு...," என்று மருத்துவர் உறுதி கூறுகிறார். திரைப்படத்தில் குழு நடிகையாகவும் முற்காலத்தில் சிலர்க்கு ஆசை நாயகியாயும் இருந்த ஸ்ரீபிரியா இதற்கு ஒப்புக்கொள்கிறார்.

கணவனின் உயிரணு பெறப்பட்டு ஸ்ரீபிரியாவுக்குக் கருவூட்டப்படுகிறது. ஒருபோதும் ஸ்ரீபிரியாவைத் தம் கணவன் பார்த்துவிடக்கூடாது என்பதில் இலட்சுமி உறுதியாக இருக்கிறார். அதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் ஓராண்டுக் குடியிருப்புக்கென்று ஒற்றைத் தனிவீட்டை எடுத்து ஸ்ரீபிரியாவைக் குடியமர்த்துகிறார். ஸ்ரீபிரியாவுக்குக் காவலாக கள்ளச் சாராயக்காரி மனோரமாவை வேலைக்காரியாகச் சேர்க்கிறார். பிள்ளையைச் சுமப்பதால் வாடகைத் தாய்க்குப் பாலும் தேனும் பழங்களும் ஊட்டப்படுகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் வீட்டுக்குள் சிறையுணர்வு தோன்ற, இலட்சுமிக்குத் தெரியாமல் இருவரும் திரைப்படத்திற்குச் செல்கிறார்கள். இதனால் இலட்சுமியே ஸ்ரீபிரியாவை வெளியே அழைத்துச் செல்கிறார். அவ்வாறு வெளிச்செல்கையில் ஓர் உணவு விடுதியில் சிவக்குமாரை ஸ்ரீபிரியா பார்த்துவிடுகிறார்.

Avan Aval Athu, Another 80's classic

இலட்சுமியின் கணவர்தான் இவர் என்பது ஸ்ரீபிரியாவுக்கு முன்பே தெரியும். தம் கருவைச் சுமப்பவர் இவர்தான் என்பது சிவக்குமார்க்குத் தெரியாது. ஸ்ரீபிரியா அவரிடம் தாம் யாரென்பதையும் உம் பிள்ளையைச் சுமக்கிறேன் என்பதையும் கூறும் நெகிழ்ச்சியான கட்டம். இன்றைக்குப் பார்த்தாலும் அந்தக் காட்சி நமக்குக் கலவையான அதிர்வுகளைத்தான் தோற்றுவிக்கிறது. பிறகு இலட்சுமிக்குத் தெரியாமலே இருவரும் சந்திக்கிறார்கள். ஒரு பொய்க்காரணம் கூறிவிட்டு வெளியூர் சென்று தழுவுகிறார்கள். பிறகு ஊர் திரும்புகிறார்கள். கருவயிற்றுக்கு வழக்கமான சோதனைகள் நடக்கின்றன. ஸ்ரீபிரியா உறவில் ஈடுபட்டிருப்பதை மருத்துவர் கண்டுபிடித்து இலட்சுமியிடம் தெரிவித்துவிடுகிறார். அழுது அதிர்ந்து ஸ்ரீபிரியாவிடம் கேட்கையில், "உன் பிள்ளைக்கு எதிராக எதையும் செய்யவில்லை," என்பதுதான் அவருடைய விளக்கம். இறுதியில் பிள்ளைப்பேற்றின்போது எல்லாம் தெரியவருகிறது. ஸ்ரீபிரியாவின் பிரிவு, அழுகை என்று உணர்ச்சிமயமான முடிவு.

முக்தா சீனிவாசன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மிகவும் கூர்மையான படங்களை எடுக்கக்கூடிய இயக்குநர்கள் கூடத் தொடத் தயங்குகிற கருப்பொருளை 'அவன் அவள் அது'வில் சீனிவாசன் தொட்டிருப்பது என் முதல் வியப்பு. அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இவரே நாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் படங்களைப் போன்று இவருடைய படங்களிலும் பாசப் போராட்டங்களே நடுச்சரடாக இலங்குகின்றன. காட்சிகளைத் தனித்தனிச் சுடுவுகளாக அமைக்காமல் கலைஞர்களை நடிக்கவிட்டுப் பதிவாக்கும் முறைமையைப் பின்பற்றியிருக்கிறார். இன்று பத்து நொடிகளுக்கு மேல் ஒரு தனிச்சுடுவைக் காட்டக்கூடிய நிலைமையில்லை. அன்றைய காலகட்டத்தில் பெண் பார்வையாளர்கள் மிகுந்திருந்த திரைப்படச் சந்தையில் முக்தா சீனிவாசனின் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும்தான்.

Avan Aval Athu, Another 80's classic

முக்தா சீனிவாசனின் படங்களில் கதையோடு கூடிய நகைச்சுவைக் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய அவர் ஓர் அரசியல்வாதியாகவும் அறியப்படுபவர். ஓர் இயக்குநராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் பங்காற்றியுள்ளார். அவருடைய படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அறுபத்தைந்து படங்களை இயக்கிப் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர் பற்பல நூல்களின் ஆசிரியரும்கூட. 'தமிழ்த் திரைப்பட வரலாறு' என்னும் அவரது தொடர் துக்ளக்கில் வெளிவந்திருக்கிறது. திரைப்பட வரலாறு திரைப்படக்காரர் ஒருவரால் எழுதப்படுவதுதான் சிறப்பு. கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலில் அதைச் சேர்த்திருக்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X