Avatar Fire and Ash Day 1 Collection - அவதார் 3 படத்தின் முதல் நாள் வசூல்..இந்தியாவில் கெத்து காமிக்குதே ப்பா!
சென்னை: உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் Avatar Fire And Ash (அவதார் 3). பெரிய எதிர்பார்ப்போடு நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பலரிடம் ஓரளவுக்கு நல்லபடியான விமர்சனத்தையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் அப்படம் இந்தியாவில் முதல் நாளான நேற்று எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது என்ற விவரத்தை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
உலக அளவில் ஃபேமஸான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கத்தில் வெளியான டைட்டானிக் உள்ளிட்ட படங்கள் எல்லாம் இன்றுவரை உலகம் முழுவதும் இருக்கும் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. அவர் வேற்று கிரகவாசிகளை அடிப்படையாக வைத்து அவதார் படத்தை கடந்த 2009ஆம் ஆண்டு இயக்கினார். கதை ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் பக்காவாக இருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
அவதார் 2: முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றி; அவரை அடுத்த பாகம் எடுக்க தூண்டியது. அதன்படி கடந்த 2022ஆம் ஆண்டு அவதார் தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் இரண்டாவது பாகத்தை எடுத்தார். முதல் பாகத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த கேமரூன் இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பம் உள்ளிட்ட விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரவேற்பை பெற்றார். அதேசமயம் கதை ரீதியாக அந்தப் படத்துக்கு பெரிய ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. அதேசமயம் அப்படமும் பெரிய வெற்றியை பெற்றது.

அவதார் 3: இரண்டு பாகங்களின் வெற்றியும் ஜேம்ஸ் கேமரூனுக்கு உற்சாகத்தை கொடுக்க இதன் மூன்றாவது பாகமான Avatar Fire And Ash படத்தை இயக்கியிருக்கிறார். முதல் பாகத்தில் காடு, இரண்டாவது பாகத்தில் ஆழ் கடலை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்த கேமரூன் இந்தப் பாகத்தில் அவற்றோடு சேர்த்து எரிமலைகளையும் கண்களுக்கு விருந்தாக வைத்திருக்கிறார். சல்லியுடன் வளரும் தனது மகனை அழைத்து செல்லவும், சல்லியை கொன்று பண்டோரா உலகத்தை கைப்பற்றவும் மீண்டும் மைல்ஸின் நினைவோடு வரும் அவதார் மற்றும் தொழில்நுட்பங்களை சமாளித்து தனது பண்டோராவை சல்லி எப்படி காப்பாற்றுகிறான் என்ற அவுட் லைனில் இந்த பாகத்தை உருவாக்கியிருக்கிறார்.
எப்படி இருக்கு படம்?: இப்படமானது உலகம் முழுவதும் நேற்று பிரமாண்டமாக வெளியானது. இரண்டு பாகங்களுக்கும் எப்படி ரசிகர்கள் ஆர்வமாக சென்றார்களோ அதேபோல்தான் இதற்கும் சென்றார்கள். அதேசமயம் படம் பார்த்த ரசிகர்களுக்கு முழு திருப்தியும் கிடைக்கவில்லை. ஆனால் தொழில்நுட்ப ரீதியாக இப்படத்திலும் கேமரூன் புகுந்து விளையாடியிருக்கிறார் என்று படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். மேலும் இரண்டாவது பாகத்தைவிடவும் கதை ரீதியாக இது கொஞ்சம் டல்லடிப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.
இந்தியாவில் வசூல்: இந்தியாவை பொறுத்தவரை அவதார் படத்துக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் இங்கு முதல் நாளில் அவதார் 3 படம் செய்திருக்கும் வசூல் கூறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் அந்தப் படம் 20 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாகமும் முதல் நாளில் இதே அளவிலான வசூலை இந்தியாவில் பெற்றது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலும் மூன்றாவது பாகத்துக்கு இந்தியாவில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











