Avatar Fire And Ash Day 2 Collection - அவதார் 3 இரண்டாவது நாள் வசூல்.. இந்தியாவில் குறையாத மவுசு.. செம வேட்டை
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ். இது அவதார் படத்தின் மூன்றாவது பாகமாகும். நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான படத்துக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
டெர்மினேட்டர், டெர்மினேட்டர் 2, டைட்டானிக் என உலக புகழ் பெற்ற படங்களை இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன். அவரது படங்களில் டெக்னாலஜி மற்றும் ஆக்ஷன்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ அதேபோல் கதைக்கும் இருக்கும் என்பதால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அவரது படம் ரிலீஸானால் விருப்பத்தோடு சென்று பார்ப்பார்கள். புவியில் இருக்கும் மனிதர்களையும், சம்பவங்களையும் வைத்து படம் எடுத்துக்கொண்டிருந்த அவர் அவதார் படத்தின் மூலம் ஏலியன்களை திரைக்குள் அழைத்துவந்தார்.

அவதார் மெகா ஹிட்: கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதுவரை வாய் வழி கதைகளாக ஏலியன்கள் பற்றி கேட்டுக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு; அந்தப் படம் புதிய அனுபவத்தை கொடுத்தது. இதன் காரணமாக அப்படத்தின் அடுத்த பாகத்தையும் கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கினார் அவர். பஞ்ச பூதங்களை குறிக்கும்வகையில் அவதார் படத்தை மொத்தம் ஐந்து பாகங்களாக எடுக்கவும் கேமரூன் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவதார் 3: முதல் பாகம் பெற்ற வரவேற்பை போன்று இரண்டாவது பாகம் பெறவில்லைதான். இருந்தாலும் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் என்கிற பெயரில் அவதார் 3 படத்தை இயக்கினார். முதல் பாகம் நிலம், இரண்டாவது பாகம் நீரில் நடப்பது போன்று உருவாக்கிய அவர்; இந்த பாகத்தை நெருப்பு சார் நிலத்தில் உருவாக்கியிருக்கிறார். இப்படமானது நேற்று முன்தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது.
படத்துக்கு சுமார் வரவேற்புதான்: இப்படத்துக்கு சுமாரான வரவேற்பே விமர்சன ரீதியாக கிடைத்திருக்கிறது. வழக்கம்போல் டெக்னிக்கல், விஷுவலில் இயக்குநர் மிரட்டிவிட்டார். ஆனால் கதையில் கோட்டைவிட்டுவிட்டார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக நெருப்பு சார் நிலம் சொல்லிவிட்டு பெரும்பாலான காட்சிகள் நீரில் நடப்பது போன்றே எடுத்து வைத்திருக்கிறார் எனவும் விமர்சனம் செய்கிறார்கள். அதேசமயம் விஷுவல் ட்ரீட்டுக்காக கண்டிப்பாக குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று பார்க்கலாம்.
இந்தியாவில் வசூல்: இந்நிலையில் அப்படம் ரிலீஸான இரண்டாவது நாளில் இந்தியாவில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி முதல் நாளில் 20 கோடி ரூபாய்வரை வசூலித்த அப்படமானது நேற்று மட்டும் 22.50 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆக, இரண்டு நாட்களில் இந்தியாவில் அந்தப் படம் 42 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியிருக்கிறது. போகப்போக வசூல் இன்னும் பிக்கப் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











