Avatar Fire and Ash Day 3 Box Office - அவதார் 3 படத்தின் 3வது நாள் வசூல்.. இந்தியாவில் மாஸ் காண்பிக்குது
சென்னை: ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவதார் படத்தின் மூன்றாவது பாகமான அவதார் ஆஷ் அண்ட் ஃபயர் திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படத்துக்கு இந்தியாவில் நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. இந்நிலையில் அப்படம் மூன்றாவது நாளில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது படங்கள் ரிலீஸானாலே தியேட்டருக்கு படையெடுத்து சென்று பார்ப்பார்கள். எந்த நாட்டுக்காரராக இருந்தாலும் கேமரூன் படம் அவர்களுக்கு நெருக்கம்தான். கதை, டெக்னாலஜி,விஷுவல் என ஒரு திரைப்படத்தின் அத்தை ஏரியாக்களையும் பக்காவாக ப்ரெசண்ட் செய்யக்கூடிய வித்தை தெரிந்தவர் அவர். அப்படி அவர் இயக்கிய அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது.
அவதார் 3: முதல் பாகம் 2009ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்தது. இப்படத்தை மொத்தம் ஐந்து பாகங்களாக இயக்க திட்டம் என்று கூறி; இதன் இரண்டாவது பாகத்தை (நீரில் நடக்கும் கதை) கடந்த 2022ஆம் ஆண்டு உருவாக்கினார். அது முதல் பாகம் அளவுக்கு இல்லையென்றாலும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெற்றது. தற்போது அவதார் படத்தின் மூன்றாவது பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படத்தை இயக்கியிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ்: முதல் பாகம் காடு, இரண்டாவது பாகம் நீர் என எடுத்துக்கொண்ட இயக்குநர்; இம்முறை நெருப்பை எடுத்திருக்கிறார். கதை ரீதியாக பெரிய மாறுதலை செய்யவில்லை. வழக்கம்போல் பண்டோரா உலகத்தை எதிரிகளிடமிருந்து ஹீரோ சல்லி தனது கூட்டத்துடன் காப்பாற்றுவதுதான் கதை. பெரிய எதிர்பார்ப்போடு கடந்த 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது படம்.
படம் எப்படி இருந்தது?: கதையில் பெரிய மாற்றம் இல்லாததே மைனஸாகவும் அமைந்துவிட்டது. அதேசமயம் டெக்னாலஜி, விஷுவல் ட்ரீட்டில் வழக்கம்போல் மிரட்டிவிட்டார் கேமரூன். இரண்டு பாகங்களை பார்க்காமல் மூன்றாவது பாகத்தை பார்த்தால் அவர்களது கண்களுக்கு செம விருந்துதான். இருந்தாலும் முதல் பாகம், இரண்டாவது பாகம் கொடுத்த ஒரு எமோஷனல் கனெக்ட்டை இதில் கொடுக்க தவறவிட்டது ஏமாற்றம்தான் என்பது ரசிகர்களின் கருத்து.
வசூல் நிலவரம்: படத்துக்கு அப்படி இப்படி விமர்சனம் வந்தாலும் இந்தியாவில் அதன் வசூல் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி முதல் நாளில் 19 கோடி ரூபாய், இரண்டாவது நாளில் 22.25 கோடி ரூபாய் வசூலித்த அவதார் 3; மூன்றாவது நாளான நேற்று 25 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். அந்த இணையதள கணக்குப்படி பார்த்தால் மூன்று நாட்களில் அவதார் 3 மொத்தம் 66.25 கோடி ரூபாயை இந்தியாவில் அள்ளியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











