அடேங்கப்பா.. ஆதிபுருஷ் படத்துக்கு அவதார் டீம் இறங்குதாமே.. விஷுவல்ஸ் வேற லெவலில் இருக்கப் போகுதாம்!
சென்னை: இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ், சைஃப் அலி கான் நடிக்கவுள்ள பிரம்மாண்ட படமான ஆதிபுருஷ் படத்திற்கு விஷுவல் எஃபெக்ட் பணிகளை மேற்கொள்ள அவதார், ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு ஒர்க் பண்ண விஷுவல் டீம் வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் ராஜமெளலியின் பாகுபலி மற்றும் ஷங்கரின் 2.0 படங்களில் தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன.

3டி தொழில்நுட்பம்
பாகுபலி படம் கூட 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கப் படவில்லை. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடித்த 2.0 படம் தான் பக்காவான 3டி படமாக வெளியானது. அந்த படத்தை விடவும் சிறப்பாக 3டி தொழில்நுட்பத்தில் ஆதிபுருஷ் படத்தை இன்னமும் பிரம்மாண்டமாக உருவாக்க இயக்குநர் ஓம் ராவத் முடிவு செய்துள்ளாராம்.

ராமாயணம்
ஆதிபுருஷ் என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும், இது ராமாயணம் படத்தின் கதை தான் என்பது தெளிவாகி உள்ளது. இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸும் ராவணனாக நடிகர் சைஃப் அலி கானும் நடிக்க உள்ளனர் என்ற அறிவிப்புகள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

கியாரா அத்வானி
இந்த படத்தில் சீதையாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி தான் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் ஊர்வசி ரவுத்தேலா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் போது தான் யாரை இயக்குநர் தேர்வு செய்துள்ளார் என்பது தெரிய வரும்.

அவதார் டீம்
இந்நிலையில், இந்த படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொள்ள அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய WETA நிறுவனத்தின் VFX தொழில்நுட்ப கலைஞர்களை களமிறக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஒட்டுமொத்த படமும் ஸ்டூயோவில் படமாக்கப் பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

க்ரீன் மேட் ஸ்டூடியோவில்
பிரபல ஹாலிவுட் படங்களான 300 பருத்திவீரர்கள், கிராவிட்டி, சின் சிட்டி, ஆக்குவாமேன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்கள், பெரும்பாலும் க்ரீன் மேட் ஸ்டூடியோவிலேயே படமாக்கப்பட்டுள்ளன. அதே போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே ஆதிபுருஷ் படமும் எடுக்கப் போவதாக சில சூப்பரான தகவல்களும் கசிந்துள்ளன.

எப்போ ரிலீஸ்
ஆதிபுருஷ் படத்திற்காக நடிகர் பிரபாஸ் வில்வித்தை பயிற்சி, உடற்கட்டை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். நடிகர் சைஃப் அலி கானும் ராவணனாக நடிக்க வேண்டிய பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். வரும் 2021ம் ஆண்டு தொடக்கத்தில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, 2022ம் ஆண்டு தீபாவளிக்கு படத்தை படக்குழு ரிலீஸ் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











