AVM - ஹீரோக்களுக்கு வெள்ளை தோல் மேல் ஆசை.. அதான் வட மாநில ஹீரோயின்கள்.. கிழித்து தொங்கவிட்ட ஏவிஎம் குமரன்
சென்னை: கோலிவுட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். இந்த நிறுவனத்தால் ஏகப்பட்ட மெகா ஹிட் படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது படங்கள் எதையும் பெரிதாக தயாரிப்பதில்லை. அதேசமயம் ஸ்டூடியோவில் சில சீரியல்கள், சினிமாக்களின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இந்தச் சூழலில் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மகன் ஏவிஎம் குமரன் தற்போதைய தமிழ் சினிமா நிலைமை குறித்தும், ஹீரோக்கள் குறித்தும் ஓபனாக பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. ஏன் சர்வதேச அளவில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்கூட கோலிவுட்டில் படங்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணமாக லைகாவை சொல்லலாம். இப்படி ஏகப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முத்தாய்ப்பாக இருப்பது என்றால் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ். ஏவி மெய்யப்ப செட்டியாரால் கடந்த 1945ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

பெரும் அடையாளம்: நாம் இருவர், பராசக்தி, அந்த நாள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவனம். அந்த காலத்திலேயே ஸ்டூடியோவையும் அமைத்து அதகளம் செய்தார் மெய்யப்ப செட்டியார். ஒருகாலத்தில் ஏவிஎம் தயாரிப்பில் நடிப்பதையே பெரும் கௌரவமாக கருதினார்கள் நடிகர்கள். அந்த அளவுக்கு ஏவிஎம்மின் பெருமை இருந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஏராளமான மொழிகளில் படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
மெகா ஹிட் படங்கள்: எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் மெகா ஹிட் படங்களை கொடுத்த ஏவிஎம் ரஜினிக்கு முரட்டுக்காளை, மனிதன் உள்ளிட்ட ஏராளமான படங்களையும், கமல் ஹாசனுக்கு சகலகலா வல்லவன் உள்ளிட்ட ஏராளமான படங்களையும் கொடுத்திருக்கிறது. அதேபோல் அஜித், விஜய் உள்ளிட்டோரை வைத்தும் படங்களை தயாரித்திருக்கிறது ஏவிஎம். கடைசியாக மிகப்பெரிய பொருட்செலவில் அந்த நிறுவனம் எடுத்த படம் என்றால் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி. பிறகு படிப்படியாக தயாரிப்பிலிருந்து ஒதுங்கிய அந்த நிறுவனம், கடைசியாக தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸை தயாரித்திருந்தது.
ஏவிஎம் குமரன் பேட்டி: இந்நிலையில் ஏவி மெய்யப்ப செட்டியாரின் மகன்களில் ஒருவரான ஏவிஎம் குமரன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இப்போதெல்லாம் நடிகர்கள் எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், இயக்குநர்கள் என்ன மாதிரியான கதையை இயக்குகிறார்கள் என்பதே தெரியவில்லை. ஒரு படத்தின் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று முடிகிறது.
வெள்ளை தோலுக்கு ஆசை: இப்போதைய ஹீரோக்கள் வெள்ளை தோலுக்கு ஆசைப்பட்டு மும்பை ஹீரோயின்களை கேட்கிறார்கள். அவர்களுக்கோ சரியாக நடிக்கவும் தெரியவில்லை. மொழியும் புரியவில்லை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள்தான் அவர்களது நடிப்புக்கு தங்களது குரல் மூலம் உயிர் கொடுக்க முயல்கிறார்கள். மலையாள சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 100 கோடி ரூபாய், 200 கோடி ரூபாய் வசூல் செய்கிறார். அதுதான் சினிமா வியாபாரம். ஆனால் இங்கோ படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய், வசூல் 100 கோடி ரூபாயைகூட தாண்டவில்லை. இது எப்படிப்பட்ட வியாபாரம் என்று எனக்கு புரியவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











