பராசக்தி டைட்டிலுக்கு பச்சைக்கொடி.. ஏவிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. பாவம் விஜய் ஆண்டனி?
சென்னை: 1952ம் ஆண்டு கருணாநிதி வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான படம் தான் பராசக்தி. இன்றைக்கும் அந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அப்படியே ஒரு நெருப்புக் கனலாகவே கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கிறது. சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் தலைப்பை மற்ற படங்களுக்கு வைத்து சிறுமைப்படுத்தக் கூடாது என சிவாஜி ரசிகர்கள் பேரவை சார்பில் கண்டனம் பிறப்பிக்கப்பட்டாலும் பராசக்தி பட டைட்டிலுக்கு விஜய் ஆண்டனி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு 'பராசக்தி' என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

ஆனால், அதற்கு முன்னதாகவே காலையிலேயே விஜய் ஆண்டனி தனது அடுத்த படத்தின் தலைப்பு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் வைத்து வெளியிட்ட அறிவிப்பு சிவகார்த்திகேயன் ரசிகர்களை உச்சகட்ட கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
z சூர்யா, துல்கர் சல்மானை வைத்து சுதா கொங்கரா புறநானூறு என்கிற தலைப்பில் படம் எடுக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால், சூர்யா திடீரென சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கப் போவதில்லை என வெளியேறிய நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அந்த படத்தை எடுத்து வரும் அவர் படத்திற்கு சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி படத்தின் தலைப்பை வைத்திருக்கிறார். இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவனின் கதை தான் இந்த படம் என்கின்றனர். சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இந்த படத்தில் ரவி மோகன் நடித்துள்ளார். அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
போன வருஷமே புக் பண்ணிட்டேன்: கடந்த ஆண்டு ஜூலை 22ம் தேதியே தெலுங்கில் 'பராசக்தி' என்கிற தலைப்பை விஜய் ஆண்டனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பதிவு செய்திருப்பதாக தற்போது பராசக்தி படத் தலைப்புக்காக அவரும் போட்டியிடும் நிலையில், நான் தான் முதலில் முன்பதிவு செய்திருக்கிறேன் என்கிற ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். தமிழில் சக்தித் திருமகன் என்கிற தலைப்பும் மற்ற மொழிகளில் தனது படத்திற்கு பராசக்தி என்றும் அவர் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த ஏவிஎம்: சிவாஜி கணேசனை ஹீரோவாக அறிமுகம் செய்து பராசக்தி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துக்குத்தான் அந்த தலைப்பு சொந்தம் என்கிற நிலையில், தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் கதை தமிழ் சினிமாவுக்கும் பராசக்தி என்கிற தலைப்புக்கும் சரியாக இருக்கும் என நினைத்து அந்த நிறுவனத்துக்கு இந்த தலைப்பை வைத்துக் கொள்ள அனுமதி வழங்குகிறோம் என ஏவிஎம் நிறுவனம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
டான் பிக்சர்ஸ் அதிரடி: தமிழ் மற்றும் தெலுங்கில் 'பராசக்தி' பட டைட்டிலை இந்த மாத தொடக்கத்திலேயே பதிவு செய்துவிட்டோம் என டான் பிக்சர்ஸ் நிறுவனமும் மறைமுகமாக விஜய் ஆண்டனி படத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. படத்தின் கதைக்காக யோசிப்பதை விட்டுவிட்டு பழைய பட டைட்டிலுக்காக இப்படி மோதிக் கொள்கின்றனரே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











