ஏவிஎம்மின் 177வது படமாக வருகிறது இதுவும் கடந்து போகும்!
இந்திய திரையுலகில் பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம்மின் 177வது படமாக வருகிறது இதுவும் கடந்து போகும்.
176 திரைப்படங்கள், 50க்கும் மேற்பட்ட தொலைக் காட்சித் தொடர்கள் தயாரித்து நாட்டின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்கிறது ஏவிஎம் புரொடக்ஷன்ஸ்.

நான்காம் தலைமுறை
இந்த நிறுவனத்தின் நான்காம் தலைமுறையினரும் படத்தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏவி மெய்யப்பச் செட்டியாரின் கொள்ளுப் பேத்திகளான அருணா குகன், அபர்ணா குகன் இருவரும் இப்போது தயாரிப்பில் இணைந்துள்ளனர்.

177வது படம்
இந்தப் படம் ஏவிஎம்முக்கு 177வது படம். இந்த கம்ப்யூட்டர் காலத்துக்கு ஏற்ப, 55 நிமிடங்கள் ஓடக்கூடிய வகையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். படத்துக்கு இதுவும் கடந்து போகும் எனத் தலைப்பிட்டுள்ளனர். எவ்வளவு பெரிய துயரமும் கால ஓட்டத்தில் மறைந்துவிடும் என்பதுதான் படத்தின் கதைக் கரு.

சிவாஜி தேவ்
படத்தின் நாயகனாக சிவாஜி தேவ் நடித்துள்ளார். ஷில்பா பட் ஜோடியாக நடித்துள்ளார். ரவி ராகவேந்தர், அனுஷா பட், அஞ்சலி, உபாசனா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். உமா சங்கர் இசையமைத்துள்ளார். கதை திரைக்கதை வசனத்தை ஸ்ரீஹரி பிரபாகரன் எழுதியுள்ளார். இயக்கம் - அனில் கிருஷ்ணன்.

ஏவிஎம் சரவணன்
இந்தப் படத்தை எம் சரணவணன், எம்எஸ் குகன், அபர்ணா குகன், அருணா குகன் ஆகியோர் தயாரித்துள்ளனர். விரைவில் பெரிய முழுநீள படம் ஒன்றையும் தயாரிக்கும் திட்டமிருக்கிறது. அதற்கு முன் இதுவும் கடந்து போகும் வருகிறது.

யு ட்யூபில்..
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடாமல் யு ட்யூப் இணையதளத்தில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடுகின்றனர். www.youtube.com/moviesavm என்ற முகவரியில் படத்தைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











