எஜமான் ரஜினி மாதிரி கணவர் வேண்டும் - ரசிகையின் கடிதம்; பகிர்ந்த ஏவிஎம்
சென்னை: எஜமான் படத்தில் ரஜினி ஏற்றிருந்த வானவராயன் கதாபாத்திரம்போல் ஒரு கணவர் வேண்டும் என ரசிகை எழுதிய கடிதத்தை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்திருக்கிறது.
சினிமாவில் நடிப்பதற்கு எத்தனையோ நடிகர்கள் வந்திருக்கிறார்கள், வரவிருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் உள்ளே வந்த பிறகு சினிமாவுக்குள் வரும் நடிகர்களிடம் ரஜினியின் தாக்கத்தை பார்க்கலாம். அந்த அளவுக்கு ரஜினிகாந்த் சினிமாவில் உழைத்து பலரையும் கவர்ந்திருக்கிறார். அபூர்வ ராகங்களில் ஆரம்பித்த அவரது பயணம் ஜெயிலர்வரை வந்திருக்கிறது. இத்தனை காலத்தில் ரஜினிகாந்த் எத்தனையோ மெகா ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் எஜமான்
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் எஜமான். கடந்த 1993ஆம் ஆண்டு வெளியான இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. மீனா, நெப்போலியன், நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமானது மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. காட்சிகள், ரஜினியின் மேனரிஸம், இளையராஜா இசை, கவுண்டமணி, செந்தில் காமெடி என இன்றுவரை அந்தப் படம் பலரது ஃபேவரைட்டாக திகழ்ந்துவருகிறது.

எஜமான் ஷூட்டிங்கில் குடும்பத்துடன் தங்கிய ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தன் பட ஷூட்டிங்குக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்களை அழைத்து செல்லும் வழக்கம் இல்லாதவர். ஆனால் எஜமான் படத்துக்கு தனது மகள்களையும், மனைவியையும் அழைத்து சென்றிருக்கிறார். மேலும், ஷூட்டிங் முடிந்த பிறகும் படத்தில் வரும் ரஜினியின் வீட்டிலேயே குடும்பத்துடன் இரண்டு நாள்கள் தங்கியிருந்துவிட்டு வந்திருக்கிறார். அந்த அளவுக்கு எஜமான் படம் ரஜினிக்கு நெருக்கமானது. இதனை படத்தின் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்திருந்தார்.

எஜமான் படம் பார்த்து ரசிகையின் கடிதம்
இந்தப் படமானது வெளியாகி கடந்த பிப்ரவரி 18ஆம் தேதியுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இந்நிலையில் எஜமான் படம் பார்த்துவிட்டு ரசிகை ஒருவர் ஏவிஎம் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் அவர், "வணக்கம்! நான் செல்வி திலகவதி எழுதுகிறேன். எஜமான் வானவராயன் போல் ஆண் இருந்தால் சொல்லுங்கள். உடனே கழுத்தை நீட்டுகிறேன். சார் சீக்கிரம் சொல்லுங்கள். நான் திருமணம் செய்து கொண்டு திரும்பவும் என் கணவனோடு பார்க்கும் படம் எஜமானாகத்தான் இருக்கவேண்டும்.

கண்ணீர் சிந்தாமல் வாழ்வது உறுதி
வெள்ளித்திரையில் அழியா கதை படைத்துவிட்டு எனது நெஞ்சத்தில் எஜமான் வானவராயனை நிறுத்திவிட்ட உதயகுமாருக்கு வைர கிரீடம்தான் சூட்ட வேண்டும். இந்தக் கதையால் பல எஜமான்கள் உருவாவது நிச்சயம். பல வைத்தீஸ்வரிகள் கண்ணீர் சிந்தாமல் வாழ்வது உறுதி" என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்ர். எஜமான் படத்தை பார்த்துவிட்டு ஒரு பெண் ரசிகை இப்படி கடிதம் எழுதியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், ரஜினியின் படமும், அவர் நடிப்பும் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம் என ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











