Ayalaan vs Captain Miller Box Office: கேப்டன் மில்லரை துரத்தும் அயலான்.. 2ம் நாள் வசூல் நிலவரம் இதோ!
சென்னை: 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழில் 4 படங்களும் தெலுங்கில் 2 படங்களும் வெளியாகி உள்ளன. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் பைலிங்குவல் படமான மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் இந்த பொங்கல் போட்டியில் பங்கேற்றுள்ளன. லால் சலாம், அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் பொங்கல் போட்டியில் பங்கேற்கவில்லை.
ரஜினிகாந்த், விஜய், அஜித் படங்கள் வெளியாகும் நாட்கள் தான் தற்போது தமிழ் சினிமாவில் தீபாவளியாகவும் பொங்கலாகவும் மாறி விட்டன. பண்டிகை நாட்களில் சமீப காலமாக சிவகார்த்திகேயன் குறி வைத்து படங்களை ரிலீஸ் செய்து வருகிறார். இந்த பொங்கலுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கக் கூடிய படமாகவே அயலான் படத்தை கொடுத்திருக்கிறார்.

தனுஷின் கேப்டன் மில்லர் வசூல்: முதல் நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், 2ம் நாளில் சற்றே குறைந்து 6 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் மட்டும் 14 முதல் 15 கோடி ரூபாய் வசூலை கேப்டன் மில்லர் எட்டியுள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் 15 முதல் 17 கோடி வரை வசூல் ஈட்டியதாக கணிக்கப்பட்டுள்ள கேப்டன் மில்லர் வசூல் 2ம் நாளில் 22 கோடி முதல் 23 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயலான் 2ம் நாள் வசூல்: முதல் நாளில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் தமிழ்நாட்டில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாகவும் உலகம் முழுவதும் 10 முதல் 12 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், 2ம் நாளில் கேப்டன் மில்லரை போல அல்லாமல் அயலான் வசூலில் முன்னேற்றம் இருப்பதாகவும் பல இடங்களில் ஸ்க்ரீன்கள் அயலான் படத்துக்கு கிடைத்து வருவதாகவும் கூறுகின்றனர். அதன் காரணமாக அயலான் திரைப்படம் 2ம் நாளில் உலகம் முழுவதும் 20 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
கேப்டன் மில்லரை முந்துமா?: ஞாயிற்றுக்கிழமையான இன்று போகிப் பண்டிகை, நாளை பொங்கல், நாளை மறுதினம் மாட்டுப் பொங்கல், அதன் பின்னர் காணும் பொங்கல் என வரிசையாக 4 நாட்கள் விடுமுறை நாட்கள் இருப்பதால் அயலான் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் கேப்டன் மில்லரும் நல்ல டஃப் கொடுக்கும் என்றும் ஆக்ஷன் பிரியர்களுக்கு அந்த படம் பிடிக்கும் என்பதால் ஒரு வாரத்திற்குப் பின் தான் யாரு ரியல் பொங்கல் வின்னர் என்பது தெரியவரும் என்கின்றனர்.
மற்ற படங்கள்: மிஷன் சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்களும் சொதப்பவில்லை என்றும் அந்த படங்களும் தியேட்டர்களில் நல்ல வசூலை ஈட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பொங்கலுக்கு வெளியான 4 படங்களும் சூப்பர் இல்லை என்றாலும், சொதப்பவில்லை என்பதே பெரிய ஆறுதலாக உள்ளது.


Click it and Unblock the Notifications











