Ayalaan: அயலான் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை... மீண்டும் நொந்துபோன சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அயலான் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அயலான் படத்தை வெளியிட தடை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை, 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வந்தது.

ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக அயலான் படத்தின் தயாரிப்பில் இருந்து 24 AM நிறுவனம் விலகியது. இதனால் அயலான் படம் பாதியிலேயே ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. இதனையடுத்து அயலான் படத்தின் தயாரிப்பு உட்பட அனைத்து உரிமைகளும் கேஜேஆர் ஸ்டுடியோஸுக்கு மாறின. அதன்பின்னரே அயலான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அயலான் படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.
இதனிடையே அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால், தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கலுக்கு மாற்றியது படக்குழு. அதன்படி இந்தப் படம் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அயலான் படத்தை வெளியிட தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயலான் மட்டுமின்றி வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் 4 வாரங்களுக்கு வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதாவது, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 24 AM ஸ்டுடியோஸ் ரூ.10 கோடி கடனாக பெற்றிருந்தது. கேஜேஆர் ஸ்டுடியோ அந்த கடனை ஏற்று ரூ.3 கோடி மட்டும் திருப்பி செலுத்தியதாக தெரிகிறது. இதனால் மீதமுள்ள தொகையையும் கொடுக்க வேண்டும் என டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் அயலான், ஆலம்பனா ஆகிய படங்களை 4 வாரங்களுக்கு வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் அயலான் படத்துக்கு தற்போது மேலும் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் உட்பட மொத்த படக்குழுவினரும் டென்ஷனாக உள்ளனர். அதேபோல் அயலான் படத்தின் ரிலீஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். அதேநேரம் பொங்கலுக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால் அதற்குள்ளாக அயலான் ரிலீஸுக்கு தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











