Ayalaan: ஏலியன்ஸுடன் பறந்து வந்த சிவகார்த்திகேயன்... குட்டி ரசிகருக்கு அயலான் கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் டீசருக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அட்டகாசமான போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஏலியன்ஸுடன் பறந்து வந்த சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் டாப் 5 நடிகர்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். சின்ன திரையில் இருந்து சில்வர் ஸ்க்ரீனில் மிரட்டி வரும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு, ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் ஓபனிங்கும் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபம் கொடுத்து வருகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், ரசிகர்களின் வரவேற்பால் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் கமல்ஹாசன் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அயலான் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு, பட்ஜெட் பிரச்சினை போன்றவை காரணமாக கிடப்பில் போடப்பட்டது.
பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல் ஏலியன்ஸ் சயின்ஸ் பிக்ஸன் படமான அயலானின் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

அதேநேரம், இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என்பதால், அயலான் சொன்னபடி தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. மேலும், அயலான் டீசர் வெளியாகும் என எதிர்பார்ப்பு காணப்பட்டது. அயலான் டீசர் குறித்து படக்குழுவினர் தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வராத நிலையில், தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியான இந்தப் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஏலியன்ஸுடன் பறந்து வருவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஹேப்பி விநாயகர் சதுர்த்தி எனவும் ரசிகர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன் மேட் போஸ்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், தனது குட்டி ரசிகர் ஒருவரை கையில் தூக்கி வைத்துள்ள சிவகார்த்திகேயன், அவருக்கு கிஃப்ட் கொடுக்கும் போட்டோவும் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











