Ayalaan Teaser: லியோ ட்ரெய்லர் ஸ்டைலில் அயலான் டீசர்... நாளை மாலை ஏலியன்ஸ் திருவிழா!!
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.
இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த அயலான், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால் பொங்கல் ரிலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனிடையே அயலான் டீசர் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
அதன்படி, சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் நாளை மாலை 7.08 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
நாளை மாலை அயலான் டீசர்
மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து, தனது 21வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முன்னதாக சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், பைனான்ஸ் பிரச்சினை உட்பட பல காரணங்களால் பாதியிலேயே ட்ராப் ஆனது. அதன்பின்னர் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அயலான் மீண்டும் உயிர்ப் பெற்றது.

'இன்று நேற்று நாளை' படம் மூலம் பிரபலமான ரவிக்குமார், அயலானை இயக்கியுள்ளதால், அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முதல் படத்தில் டைம் ட்ராவல் சப்ஜெக்ட்டை கையில் எடுத்த ரவிக்குமார், அயலானில் ஏலியன்ஸுடன் களமிறங்குகிறார். சிவகார்த்திகேயன், ரவிக்குமார், AR ரஹ்மான் என செம்ம சூப்பரான காம்போவில் உருவாகியுள்ளது அயலான். இந்திய சினிமாவின் முதல் ஏலியன்ஸ் படமாக அயலான் உருவாகியுள்ளதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
இந்நிலையில், அயலான் டீசர் நாளை வெளியாகவுள்ளது. ரசிகர்களுக்கான செம்ம விஷுவல் ட்ரீட்டாக இந்த டீசர் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அக்டோபர் 6ம் தேதி அயலான் டீசர் வெளியாகும் என அறிவித்திருந்த படக்குழு, தற்போது அதற்கான நேரத்தையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை இரவு 7 மணி 8 நிமிடங்களில் அயலான் டீசர் வெளியாகிறது. 2.4 நிமிடங்கள் வரை இந்த டீசர் இருக்கும் என்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அயலான் டீசர் சன் டிவியின் யூடியூப்பில் வெளியாகும் என்பதையும் படக்குழு குறிப்பிட்டுள்ளது. விஜய்யின் லியோ ட்ரெய்லர் சன் டிவி யூடியூப்பில் வெளியானதை போல, அயலான் டீசரும் அதேபோல் ரிலீஸாகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் லியோ ரிலீஸாகும் தியேட்டர்களிலும் அயலான் டீசர் ஸ்க்ரீனிங் ஆகும் என சொல்லப்படுகிறது.
நாளை மாலை வெளியாகவுள்ள அயலான் டீசருக்கு அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ரவிக்குமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அயலான் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது அயலான் படத்திற்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











