Ayalaan Teaser: சிவகார்த்திகேயனின் அயலான் டீசர்... இந்த தீபாவளி வேற லெவலில் இருக்கும்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அயலான் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயலான் படத்தின் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாம்.
அதன்படி முதலில் டீசரை வெளியிட அயலான் படக்குழு முடிவு செய்துள்ளது.

விரைவில் அயலான் டீசர்
'இன்று நேற்று நாளை' திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் ரவிக்குமார். விஷ்ணு விஷால், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தின் திரைக்கதை சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்தார் 'இன்று நேற்று நாளை' இயக்குநர் ரவிக்குமார். அதன்படி இக்கூட்டணியில் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான்.
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தை 24AM நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டானார். அதேவேகத்தில் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'வேற லெவல் சகோ' பாடலை வெளியிட்டு எனர்ஜி கொடுத்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது அயலான்.
அதன்பின்னர் KJR ஸ்டூடியோஸ் பேனருக்கு மாறிய அயலான், தற்போது ரிலீஸுக்கும் ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இதனையடுத்து கிராபிக்ஸ் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்கும் பணியில் இயக்குநர் ரவிக்குமார் பிஸியாக உள்ளாராம். இந்நிலையில் அயலான் டீசர் குறித்து திடீரென ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது கேஜிஆர் ஸ்டூடியோஸ்.

அதில், இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் பட்டாசு கொளுத்த தயாராக இருங்கள், அயலான் டீசர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அயலான் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் அப்டேட் வெளியான போது மினி கிளிம்பிஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டது. அதுவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்த நிலையில், இப்போது டீசரும் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள அயலான், தமிழ் சினிமாவின் முதல் ஏலியன்ஸ் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாகவும் அயலான் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் அயலானுக்குப் போட்டியாக கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











