Ayalaan Vs Captain Miller - அயலான் Vs கேப்டன் மில்லர்.. கேப் விடாமல் ஆப்பு அடிக்கும் அயலான்
சென்னை: மாவீரன் படத்தின் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் வெளியானது. இன்று நேற்று நாளை படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. அதே நாள் அயலானுக்கு போட்டியாக் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியானது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர், அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1, விஜய் சேதுபதி நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியாகின. நான்கு படங்களுக்கு இடையிலும் போட்டி என்றாலும் அயலானுக்கும், கேப்டன் மில்லருக்குமான போட்டிதான் ரசிகர்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் தனுஷால்தான் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயலான்: இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்த ரவிக்குமார் சில வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினார். ஏலியனை மையமாக வைத்து படம் உருவாகியிருக்கிறது என்று தெரியவந்ததால் அப்போதே பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சில காரணங்களால் நீண்ட தாமதத்துக்கு பிறகு அயலான் ஒருவழியாக ரிலீஸாகிவிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சிவகார்த்திகேயன், யோகிபாபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கேப்டன் மில்லர்: ராக்கி, சாணிக்காயிதம் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம்தான் கேப்டன் மில்லர். முதன்முறையாக அவர் நடிப்பு அசுரன் தனுஷுடன் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்தது. இதில் தனுஷுடன் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
அயலான் Vs கேப்டன் மில்லர்: முதல் நாளில் இரண்டு படங்களுக்குமே ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்தன. ஆனால் போகப்போக அயலான் இந்த ரேஸில் முன் செல்ல ஆரம்பித்தது. அதற்கு காரணம் ஏலியன் சப்ஜெக்ட்தான். ஏனெனில் அதுபோன்ற ஃபேண்டஸி ஜானர் குழந்தைகளை எளிதாக கவர்ந்துவிடும். அந்த ஃபார்முலா அயலானுக்கும் செட் ஆனது. கேப்டன் மில்லர் படம் சமூக அக்கறையுள்ள படமாக உருவாக்க அருண் மாதேஸ்வரன் முயற்சி செய்திருக்கிறார் அவ்வளவே என்ற விமர்சனம் பின்னடைவை கொடுத்தது.
வசூல்: வசூலை பொறுத்தவரை அயலான் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துவிட்டது. கேப்டன் மில்லர் திணறிக்கொண்டிருந்தது. இதனையடுத்து படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்த சூழலில் அயலான் திரைப்படம் 70 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. கேப்டன் மில்லரோ 50 கோடி ரூபாய் அளவுக்குத்தான் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் இரண்டு படங்களும் வெளியாகி 11 நாட்கள் முடிவடைந்த சூழலில் நேற்றுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி நேற்று வார நாள் என்பதால் இரண்டு படங்களுக்குமே வசூலில் டல் அடித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம் அப்போதும் அயலான் படம்தான் வசூலில் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. அதன்படி நேற்று அயலான் திரைப்படம் கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய்வரையிலும், கேப்டன் மில்லர் 60 லட்சம் ரூபாய்வரையிலும் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











