அடுத்த ஷாக்.. திடீர் மாரடைப்பு.. அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி
திரிச்சூர்: அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் மோசமான நிலையில், அவரது உடல் இருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நிகழும் பிரபலங்களின் மரணங்களால் திரைத்துறையே அதிர்ச்சியில் உறைந்து நிற்கும் நிலையில், அடுத்த ஷாக்காக இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் சச்சி
பிரபல திரைக்கதை ஆசிரியரும், சினிமா இயக்குநருமான சச்சி, நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கியவர். முன்னதாக பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் உருவான அனார்கலி படத்தையும் சச்சி இயக்கி இருந்தார். பிருத்விராஜின் டிரைவிங் லைசன்ஸ் படத்திற்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

அய்யப்பனும் கோஷியும்
ஈகோ அதிகம் கொண்ட ரிட்டயர்ட் ராணு வீரன் கோஷி மற்றும் ரிட்டயர்ட் ஆகப் போகும் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் நாயர் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு இடையே நடைபெறும் கதையை, அந்த அளவுக்கு யதார்த்தத்துடனும், ரசனையுடனும் இயக்குநர் சச்சி இயக்கி இருந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை இந்த ஆண்டு கொடுத்திருந்தார்.

போட்டி போட்டுக் கொண்டு
இந்த படத்தின் பாலிவுட் உரிமையை நடிகர் ஜான் ஆபிரகாம் கைப்பற்றி உள்ளார். பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ள அந்த படத்தில் பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. மேலும், தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்ய பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். சசி குமார், ஆர்யா நடிக்கப் போகிறார்கள் என்று வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பின்னர் சூர்யா, கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின.

அறுவை சிகிச்சை
ஜூன் 15ம் தேதியான நேற்று தான் இயக்குநர் சச்சிக்கு இடுப்பு எழும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்று, வீட்டிற்கு திரும்பி உள்ளார். இந்நிலையில், திடீரென இன்று ஏற்பட்ட மாரடைப்பால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டு இருக்கும் தகவலை அவரது நண்பரும் எழுத்தாளருமான சேது தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு
திரிச்சூரில் உள்ள ஜூபிளி மிஸன் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கும் இயக்குநர் சச்சிக்கு சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், மலையாள திரையுலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

மருத்துவமனைக்கு விரைந்த பிருத்விராஜ்
ஆடுஜிவிதம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அண்மையில் ஜோர்டானில் இருந்து வீடு திரும்பிய நடிகர் பிருத்விராஜ், இயக்குநர் சச்சிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு செய்தியை கேட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்துள்ளார். அதே போல நடிகர் பிஜூ மேனனும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரார்த்தனை
சினிமா பிரபலங்கள் தேசிய அளவில் தொடர்ந்து மரணமடையும் செய்தி திரைத்துறையினர் வாட்டி வருகிறது. இந்நிலையில், மிகவும் மோசமான நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் அய்யப்பனும் கோஷியும் இயக்குநர் சாச்சி என்ற தகவலை அறிந்த மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











