twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி 2 தமிழ் சினிமாவுக்கு சொல்லும் பாடம் புரிகிறதா விஷால்?

    By Shankar
    |

    'தமிழ் சினிமா அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது!

    ஒரு தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திருப்பி எடுப்பதற்கு படாத பாடுபட வேண்டியதிருக்கு!!

    இதற்கெல்லாம் காரணம்-திருட்டு விசிடிதான்!!!'

    மேற்கண்ட மூன்று ஆச்சர்யக் குறிகளையும் கூகுள் தேடுதளத்தில் போட்டுப் பார்த்தால் திருஞானசம்பந்தர் காலம் தொட்டே திருட்டு விசிடி சம்பந்தப்பட்ட புலம்பல்கள் தொடங்கியிருப்பதைக் காணமுடியும்!

    Baahubali and Tamil Cinema box office

    அல்லது, சிவாஜி-எம்ஜிஆர் காலம் தொட்டு இன்றுவரை சினிமாவில் இயங்கிவரும் அண்ணன்கள் மக்கள்குரல் ராம்ஜி, தேவிமணி மாதிரியான மூத்த பத்திரிகையாளர்களைக் கேட்டால் கூடப் போதும்.

    திருட்டு விசிடியை அவ்வளவு எளிதில் ஒழித்துவிட முடியாது என்பதே கடந்தகால வரலாறு சொல்லும் உண்மை. அதுதெரியாமல் கடை கடையாக ஏறி இறங்குவதும், கமிஷனர் ஆபீஸுக்குப் போவதுமாக விஷால் எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் மீடியாவுக்கு தீனி போடுமே தவிர, தயாரிப்பாளருக்கு சோறு போடாது.

    பிற மொழிப் படங்களில் இதுபோன்ற புலம்பல்கள் கேப்பதில்லை. காரணம்-அவர்களின் வியாபார முறை. தனது படத்திற்கு நியாயமாக என்ன வியாபாரம் இருக்கிறதோ அதற்கேற்ப சம்பளம் வாங்கிக்கொள்ளும் நடிகர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன.

    தமிழ் சினிமாவில் தயாரிப்புச் செலவைவிட நடிகர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் அதிகம்! அதைக் குறைத்தாலே சினிமா ஆரோக்கியமான போக்குக்குத் திரும்பிடும். இதற்கு முன்பு இருந்த சங்கங்கள், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது சங்க பை-லாவில் இருக்கும் அதையும் விஷால் அண்ட் டீம் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

    தமிழ் ராக்கர்ஸ், திருட்டு விசிடி அச்சுறுத்தல் அத்தனையும் தாண்டி மாபெரும் வெற்றியைத் தொட்டிருக்கும் பாகுபலி - பல பாடங்களையும் கற்றுக் கொடுக்கும் படம் என்பதை தமிழ் திரையுலகம் உணரவேண்டும்.

    250 கோடியில் எடுக்கப்பட்ட படம், ஆயிரம் கோடிக்குமேல் முதல் வாரத்திலேயே வசூல் செய்திருக்கிறது. எப்போதுவரை போகும்... எவ்வளவு வசூல் ஆகும் என்பது இந்தக் கோடை முடியும்போதுதான் அனேகமாக கணக்கிட முடியும்.

    இது எப்படிச் சாத்தியமானது!? பிரபாஸ் வாங்கிய சம்பளம் 25 கோடி, ராணா 15 கோடி,மற்றவர்கள் சம்பளம் அதற்கும் கீழ் என்பது சொல்ல வேண்டியதில்லை! நிகழ்கால அரசியலில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிற அரசில் வாரிசுக்காக அடித்துகொள்ளும் சாதாரண சண்டை. அதைச் சொன்ன விதம்தான் ராஜமௌலியின் வெற்றி.

    குத்துபாட்டு இல்லை, அபத்தமான சண்டைக் காட்சிகள் இல்லை... தஞ்சாவூர் தேரை தனிமனிதாக இழுக்க முடியுமா!? ஆனால், முடியும் என்பதுபோல் பிரபாஸின் உடற்கட்டு, காட்சிப்படுத்தப்பட்ட விதம்தான் ராஜமௌலியின் யுக்தி!

    தமிழ்நாடு முழுக்க கோயில் திருவிழா நடந்துகொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக போகிறார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல் பாகுபலி ஓடும் திரையரங்குகளிலும் காணமுடிகிறது! தமிழ்ராக்கர்ஸ், திருட்டு விசிடி இரண்டும் புத்தம் புது பிரிண்ட் இறக்கியும் தியேட்டருக்கு வருகிறார்களே ஏன்? அதன் பிரம்மாண்டத்தை சின்னத்திரையில் அடைக்க முடியவில்லை என்பதுதானே! திரையரங்குகளில் 1000 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துப் போய் பார்கிறார்கள். அந்த விலையை எந்த வருத்தமும் இல்லாமல் கொடுக்கும் மனநிலை எப்படி வந்தது!? அதே விலையில் திரும்பத் திரும்ப திரையரங்குக்கு போனவர்களை நானே பார்த்திருக்கேன்.

    இத்தனைக்கும் படத்தில் தமிழ் ரசிகனுக்கு அறிமுகமான முகம் என்றால் சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மட்டுமே! அஜித்,விஜய் படங்களைத் தாண்டி வசூலாகியிருக்கிறதே என்ன காரணம்? நான் கொடுக்கும் காசுக்கு என்னைத் திருப்தி படுத்துறான் பாகுபலி என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் குரலாக இருக்கிறது.

    உலக திரைப்பட விமர்சகர் ஒருவர் பாகுபலி பற்றி இப்படிச் சொல்கிறார்:

    "இதுதான் இந்தியத் திரைப்படம். இந்தியத் தரம் என்பது தனித்துவம் மிக்கது என்பதைக் காட்டியுள்ளனர் தென்னிந்திய கலைஞர்கள். இந்தியக் கதைகளில் இல்லாத ஃபேன்டஸி வேறு எங்கும் இல்லை என்பதை உலத்துக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்தியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த இந்தியப் படத்தின் தரத்தோடு இனி உலகப் படங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்... இந்தப் படத்துக்கு 5-க்கு 5 ஸ்டார் தருகிறேன்."

    தமிழ் சினிமாவில் இதுவரை இப்படி நடந்ததில்லை. நடிகர் சங்கத்திற்கு செயலாளராக இருக்கும் ஒருவரே தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருப்பது. முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் விஷால்... யோசியுங்கள்!!

    சரிசெய்ய வேண்டியது எங்கே என்பது புரியும். அது இல்லாமல் நீங்கள் புற காரணங்கள் தேடிக் கொண்டிருப்பது, வைகை அணையை தர்மாகோல் கொண்டு மூடியதுபோல் ஆகிவிடக்கூடாது!

    - வீகே சுந்தர்

    English summary
    Baahubali 2 success is teaching a lote of lessons to Tamil Cinema box office
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X