பாட்ஷா பட தயாரிப்பாளர் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
சென்னை: பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான வீ. தமிழ் அழகன் வயது மூப்பு காரணமாக நேற்று அதாவது பிப்ரவரி 14ஆம் தேதி காலமானார். இவரது மறைவு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா, மூன்று முகம், பணக்காரன் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவரது தந்தை மறைந்த அரசியல்வாதியும் தயாரிப்பாளரும் தமிழ் சினிமா திரையுலகின் முன்னோடியுமான இராம. வீரப்பன் ஆவார். இவர் சத்யா மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு காலத்திற்கும் பெருமை சேர்க்கும் பல படங்களைத் தயாரித்துள்ளார்.

வீ தமிழ் அழகன் அவர்களின் மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள தகவல் குறிப்பில், ”அருளாளர் ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களின் மூத்த புதல்வனும், பாட்ஷா, ராணுவ வீரன்,பணக்காரன், மூன்று முகம், காக்கி சட்டை, புதிய வானம் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை தயாரித்த மற்றும் மந்திரப்புன்னகை ,நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரு. வீ. தமிழ் அழகன் அவர்கள் 14.2.2026 அன்று சிவலோக பதவி அடைந்தார் அண்ணாரது இறுதி சடங்கு நாளை அவரது இல்லத்தில் - 9, திருமலைபிள்ளை சாலை, தியாகராய நகரில் மாலை 5 மணியளவில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராஜம்மாள் வீரப்பன் மற்றும் குடும்பத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவரது மறைவுக்கு பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இவரது மறைவு சத்யா மூவீஸ் ஊழியர்கள் தொடங்கி திரையுலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இவரது மறைவு தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











