பாட்ஷா பட தயாரிப்பாளர் மரணம்.. ரஜினிகாந்த் ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
சென்னை: ஆர்.எம்.வீரப்பனின் மகனும், தயாரிப்பாளருமான வீ. தமிழ் அழகன் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமின்றி திரைத்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துவரும் சூழலில் அவரது தயாரிப்பில் பணக்காரன், பாட்ஷா என பல படங்களில் நடித்த ரஜினிகாந்த்தும் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாதவர் ஆர்.எம்.வீரப்பன். அரசியலில் மட்டுமின்றி திரைத்துறையிலும் தடம் பதித்தார். அந்தவகையில் கமல் ஹாசனை வைத்து காதல் பரிசு, காக்கி சட்டை, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களையும், ரஜினிகாந்த்தை வைத்து ஊர்க்காவலன், ராணுவ வீரன், மூன்று முகம், பாட்ஷா, தங்கமகன் போன்ற படங்களையும் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.எம்.வி படங்கள் தயாரித்தபோது அவரோடு சேர்ந்து அவரது மூத்த மகன் வீ. தமிழ் அழகனும் பணியாற்றினார்.
தமிழழகனும் தயாரிப்பாளர்: பாட்ஷா, பணக்காரன், ராணுவ வீரன் உள்ளிட்ட பல படங்களின் தயாரிப்பாளர் பெயரில் தமிழழகன் பெயரும் இடம்பெறும். தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் ஜொலித்த தமிழ் அழகன் மந்திரப் புன்னகை, நிலாப் பெண்ணே உள்ளிட்ட படங்களையும் இயக்கியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளராக வென்ற அவரால் இயக்குநராக நினைத்த அளவுக்கு வெற்றியடைய முடியவில்லை.

தமிழ் அழகன் மரணம்: இந்நிலையில் வயது மூப்பு காரணமாக தமிழ் அழகன் உயிரிழந்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டிருந்த செய்திக் குறிப்பில், " அருளாளர் ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களின் மூத்த புதல்வனும், பாட்ஷா, ராணுவ வீரன்,பணக்காரன், மூன்று முகம், காக்கி சட்டை, புதிய வானம் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை தயாரித்த மற்றும் மந்திரப்புன்னகை ,நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரு. வீ. தமிழ் அழகன் அவர்கள் 14.2.2026 அன்று சிவலோக பதவி அடைந்தார் அண்ணாரது இறுதி சடங்கு நாளை அவரது இல்லத்தில் - 9, திருமலைபிள்ளை சாலை, தியாகராய நகரில் மாலை 5 மணியளவில் நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம். திருமதி ராஜம்மாள் வீரப்பன் மற்றும் குடும்பத்தினர்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
ரஜினியின் இரங்கல்: அவரது உயிரிழப்பு அவருடைய குடும்பத்தினர் மட்டுமின்றி திரைத்துறையிலும் சோகத்தை ஏற்படுத்தியது. பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், "மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











