விருமாண்டி நடிகை அபிராமி ஃபுல் பார்மில் ரீ எண்ட்ரி - நம்பிக்கை கொடுக்கும் இயக்குநர்
சென்னை: விருமாண்டி படத்தில் கமலுடன் நடித்த அபிராமி ஃபுல் பார்மில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.
தமிழில் மிடில் கிளாஸ் மாதவன் படம் மூலம் அறிமுகமானவர் அபிராமி. அதன் பிறகு தோஸ்த், சமஸ்தானம், சமுத்திரம், வானவில் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அழகு மட்டுமின்றி திறமையையும் கொண்ட அபிராமிக்கு பலரும் ரசிகர்களாக இருந்தனர்.

கமலுடன் ஜோடி போட்ட அபிராமி
அபிராமியின் திரையுலக வாழ்க்கையில் கமல் ஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி படம் முக்கியத்துவம் வாய்ந்தது. கமலுடன் நடிக்கும்போது கொஞ்சம் ஸ்கோர் செய்வதே பெரிது என்ற நினைத்திருந்த சூழலில் அன்னலட்சுமி கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் அபிராமி. பக்கா கிராமத்து பாஷையோடு போல்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அபிராமியை பலரும் பாராட்டினர். பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார்.

மீண்டும் எண்ட்ரி கொடுத்த அபிராமி
பல வருடங்கள் நடிக்காமல் இருந்த அபிராமி, ஜோதிகா ரீ எண்ட்ரி கொடுத்த 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் வந்தார். அதில் சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். தொடர்ந்து மாதவன் நடித்த மாறா, அசொக் செல்வன் நடித்த நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருப்பினும் அவருக்கு அந்தப் படங்கள் தரமான கம்பேக்காக அமையவில்லை. அதேபோல் அந்தப் படங்களில் சிறப்பு தோற்றம் போல்தான் வந்து சென்றார்.

பக்கா ரீ எண்ட்ரி கொடுக்கும் அபிராமி
இந்நிலையில் அபிராமி ராஜ்மோகன் இயக்கத்தில் பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் நடிக்கிறார். பள்ளிக் குழந்தைகளை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகிவருகிறது. இதில் அபிராமிக்கு மிகச்சிறந்த ரோல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் இந்தப் படம் அவருக்கு பக்கா கம்பேக்காக அமையும் என கூறப்படுகிறது.

அபிராமி குறித்து ராஜ்மோகன் புகழ்ச்சி
இந்தப் படம் குறித்தும், நடிகை அபிராமி குறித்தும் பேசிய ராஜ்மோகன், "இந்தப் படத்தில் குழந்தையை பிரசவம் முதல் பள்ளிக்கூடம்வரை சுமக்கும் அம்மா கதாபாத்திரம் இருந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக விருமாண்டி புகழ், நடிகை அபிராமியை அணுகினேன். கதையை கேட்டவுடன் அவருக்கு பிடித்து நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அறிமுக நடிகை போல் என்னிடம் கருத்து கேட்டு அவரது கதாபாத்திரத்தை அட்டகாசமாக நடித்திருக்கிறார்.

மொத்த படக்குழுவும் கண்கலங்கிவிட்டோம்
ஒரு உணர்ச்சிப்பூர்வமான காட்சியில் அவர் நடித்ததை பார்த்து மொத்த படக்குழுவும் கண்கலங்கிவிட்டோம். அனைவரும் எழுந்து நின்று கை தட்டினோம். ரசிகர்களும் அதை பார்க்கும்போது கண் கலங்குவார்கள். இந்தப் படம் அபிராமிக்கு பெரும் திருப்புமுனை படமாக இருக்கும். படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். அபிராமி மட்டுமின்றி போஸ் வெங்கட் சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கின்றனர்" என்றார்.


Click it and Unblock the Notifications











