Keerthy Suresh: என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! கதையைக் கேட்டதும் தெறித்து ஓடிய கீர்த்தி சுரேஷ்.. விபரம்!
சென்னை: 2024ஆம் ஆண்டின் பிற்பாதி தொடங்கி இப்போதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ் அதிகம் கவனிக்கப்பட்ட நடிகையாக உள்ளார். காரணம் அவர் நடிப்பில் வெளியான, ரகுதாத்தா படம் விமர்சன ரீதியாக பெரும் கவனம் பெற்றது. இது மட்டும் இல்லாமல், ஓடிடி தளத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது. அதேபோல், கல்கி 2898 கி.பி படத்தில் புஜ்ஜி என்ற ஏ.ஐ. கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார் கீர்த்தி சுரேஷ் இதுவும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் இவரது திருமணம், ஹிந்தியில் தனது முதல் படத்தில் நடித்து அறிமுகமானது என கீர்த்தி சுரேஷ் ஒரு ரவுண்டு வந்துவிட்டார் என்றுதான் கூறவேண்டும். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில், கூறிய விஷயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதாவது, நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் மகா நடிகை. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றினை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இந்தப் படத்தில் இவர் நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தில் அவரது நடிப்பினைப் பார்த்து இந்திய திரையுலகமே பாராட்டியது. இந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் கொடுக்கப்பட்டது. அந்த அளவுக்கு அட்டகாசமான நடிப்பினை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தினார்.

பல முன்னணி கதாநாயகிகள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களில் கமிட் ஆக யோசித்துக் கொண்டு இருந்த போது கீர்த்தி சுரேஷ், அந்த வரிசையில் நடித்து தேசிய விருதே வாங்கிவிட்டார். அப்படியான பெருமையை பாராட்டை புகழை கீர்த்தி சுரேஷ்க்கு பெற்றுத் தந்த மகா நடிகை படத்தின் கதையைக் கேட்டதும், முதலில் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார் கீர்த்தி. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் கூறியது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நோ சொன்ன கீர்த்தி: இது தொடர்பாக அவர் பேசும்போது, " நாக அஸ்வின் என்னிடம் இந்தப் படத்தின் கதையை சுமார் 4 மணி நேரங்கள் கூறினார். கதையைக் கேட்டதும் நான் உடனே 'நோ' சொல்லிவிட்டேன். காரணம் பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் எனும்போது, அவர் குறித்து எங்காவது தவறாக காட்சி படுத்திவிட்டால், அது வரலாற்றுப் பிழையாக மாறிவிடும் என்பதுதான். ஆனாலும் நான் சாவித்ரி அம்மாவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பேன் என நாக் அஸ்வின் நம்பினார்.

பாராட்டு: அவரது நம்பிக்கைதான், நான் இந்தப் படத்தில் நடிக்க முக்கிய காரணம். அந்தப் படத்தில் நடித்த பின்னர் அனைவரும் என்னைப் பாராட்டினார்கள். தேசிய விருது கிடைத்தது. ஆனால் இவை அனைத்திற்கும் முக்கிய காரணமே, நாக் அஸ்வின் தான். அவர் மட்டும், என்மீது நம்பிக்கை வைக்காமல் இருந்திருந்தால் நான் படத்தில் நடித்திருக்கவே மாட்டேன்" எனக் கூறியுள்ளார். கீர்த்தியின் இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. குறிப்பாக பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தவறாக காட்சி படுத்திவிடக்கூடாது என்ற அவரது பார்வை பாராட்டுக்குரியது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பேபி ஜான்: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கிருஸ்துமஸ்க்கு வெளியான படம், பேபி ஜான். வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ள கீர்த்தி சுரேஷ்க்கு இந்தப் படம்தான் ஹிந்தியில் அவரது முதல் படம். மேலும் பேபி ஜான் படமானது, தெறி படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக். படத்தினை அட்லீ தயாரித்துள்ளார். படத்தை தயாரிக்க, கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடிகள் செலவாகியுள்ளது. ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 50 கோடிகள் கூட வசூல் ஆகவில்லை என கூறப்படுகின்றது.



Click it and Unblock the Notifications











