twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'உனக்கு சினிமா சரிப்பட்டு வராது'- பாக்யராஜை எச்சரித்த ஜோதிடர்

    By Shankar
    |

    'டூ', 'மாப்பிள்ளை விநாயகர் ' படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீராம் எழுதிய 'பூனை மீசை' என்கிற சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்றது.

    நூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட்டார். டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் பெற்றுக்கொண்டார்.

    விழாவில் கலந்து கொண்டு இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது மலரும் நினைவுகளில் மூழ்கினார். அவர் பேசியது:

    Bagyaraj's nostalgia at Poonai Meesai book release

    "இந்த ஸ்ரீராம் 'டூ' படத்தை முதலில் இயக்கினார். அடுத்த படம் 'மாப்பிள்ளை விநாயகர்' வெளிவரத் தாமதம் ஆனது. ஆனாலும் சோர்ந்து சும்மா இருக்காமல் இருக்கிற இடைவெளியில் ஏதாவது செய்ய வேண்டுமென்று இந்த நூலை எழுதியிருக்கிறார். அவருக்கு நம்பிக்கை வைத்து ஆதரவு தந்து ஊக்கப்படுத்தும் ஸ்ரீராமின் பெற்றோரைப் பாராட்டுகிறேன். பொதுவாக சினிமாவுக்கு வருகிறோம் என்றால் யாரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்' 'சினிமாவுக்குப் போக வேண்டாம் உருப்படுற வழியைப் பாரு' என்றுதான் சொல்வார்கள். சினிமா என்பது ஒரு வழிப்பாதை; வந்தால் திரும்ப முடியாது.

    எங்கள் ஊரில் ஒருவர் சுருள் முடியோடு அலைவார். ஊரில் எல்லாரும், அவரை ஜெமினி ஜெமினி என்று கிண்டல் செய்வார்கள். அவர் ஒருமுறை சென்னை வந்து நடிக்க வாய்ப்புக்கு அலைந்து தோல்வியடைந்து திரும்பியதுதான் காரணம்.

    நான் சில ஆண்டுகள் இங்கு அலைந்து விட்டு ஊரில் போய் சில மாதம் தங்கினால் என்னை எல்லாரும் விக்கிரமாதித்தன் வந்துட்டாருப்பா என்று கேலி பேசுவார்கள். விக்கிரமாதித்தன் என்றால் நாடாறு மாதம் காடாறு மாதம் என்று இருப்பவனாம். இப்படி நிறைய கேலி பேசி வேதனைப் படுத்துவார்கள். அது பெரிய கொடுமை. ஸ்ரீராமுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைத்து இருக்கிறது .அவர் கொடுத்து வைத்தவர்.

    என்னை சினிமாவுக்கு அனுப்ப அம்மாவைத் தவிர யாருக்கும் விருப்பமில்லை, யாரும் என்னை நம்ப வில்லை. என்னை எங்கள் ஒர்க் ஷாப்பில் போட்டுவிடலாம் என்று என் அண்ணன், சித்தப்பா, மாமா என எல்லா உறவினரும் பாடாய்ப் படுத்தினார்கள். பெரிய ஜோதிடர் ஒருவர் பிரபலமாக இருந்தார். அவரிடம் பார்ப்போம் அவர் ஒகே சொன்னால் நீ சினிமாவுக்கு போகலாம் என்றார்கள். வந்தவர் இவருக்கு சினிமா சரிப்பட்டு வராது இரும்பு சம்பந்தமான தொழில் என்றால் ஜெயிப்பார் என்றார். இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. வீட்டில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் மட்டும் சொல்லிக் கொண்டு விடியற்காலையில் 3.30 க்கு கிளம்பி வந்தேன். சினிமாவும் இரும்புதாம்மா, கேமரா, டிராலி, டிராக் எல்லாமே இரும்புதாம்மா என்று அம்மாவைச் சமாதானப்படுத்தினேன்.

    வாழ்க்கை என்பது ஒரு முறை. அதை நினைக்கிற மாதிரி வாழ்ந்து விட்டுப் போகிறேன் என்றேன் . அம்மா மட்டும்தான் என்னை நம்பி ஆசீர்வதித்து அனுப்பினார்.

    அதேபோல் 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் சுதாகரை மொட்டையடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலம் வருவது போல காட்சி வரும். அப்போது கழுதையை இழுத்துச் செல்கிற மாதிரி நடிக்க ஊரிலுள்ள ஆட்களை கூப்பிட்டோம். எல்லாருமே கேமராவைப் பார்த்த போது டைரக்டர் என்னை நடிக்க வைத்தார். படம் வெளியான போது ஊரில் எல்லாம் நான் கழுதையை இழுத்துச் செல்கிறமாதிரி போஸ்டர்கள் இருந்தன. என் அம்மாவைப் பார்த்து உன் மகன் கழுதையை பிடிக்கவா மெட்ராஸ் போனான்? என்று எல்லாரும் கேலி பேசியிருக்கிறார்கள். அம்மா என்னிடம் கேட்டார். 'ஏப்பா நீ அந்த சுதாகர் வேஷத்துல நடிச்சிருக்கலாமே' என்று அதுக்கு மூக்கு முழி நல்லா இருக்கணும், நல்ல நிறம் வேணும்மா என்றேன். உன்னையும் அதுமாதிரி ஒருநாள் ஹீரோவா உங்க டைரக்டரே நடிக்க வைப்பாருப்பா' என்றார். அதுபோலவே 'புதிய வார்ப்புகள்' படத்தில் நடிக்க வைத்தார். நான் எவ்வளவோ தயங்கியும் நடிக்க வைத்தார்.

    ஊரே நம்பா விட்டாலும் என்னை என் அம்மா நம்பினார். அதுபோல ஸ்ரீராமுக்குப் பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருக்கிறது. இவர் இனி 'டூ' ஸ்ரீராம் என்கிற பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் சினிமாவுக்கு 'டூ' விடக் கூடாது பழம் விட வேண்டும்," என்று வாழ்த்தினார்.

    விழாவில் பத்திரிகையாளர் 'மக்கள் குரல்' ராம்ஜி, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நடிகை உமா பத்மநாபன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, பேராசிரியர் நடிகர் வி.எம். ரவிராஜ், நடிகர் லொள்ளுசபா ஜீவா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் ஆகியோரும் பேசினார்கள். நடிகர் ஸ்ரீதர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    English summary
    In a book release function, Director - Actor K Bagyaraj shared his earlier days memories in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X