twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலியின் பிரமாண்ட வெற்றியால், விஜயின் புலி படத்திற்கு காத்திருக்கு பெரும் சவால்!

    By Veera Kumar
    |

    சென்னை: 'பாகுபலி' திரைப்படத்தின் பிரமாண்ட மேக்கிங் மற்றும் வரவேற்பால், சிம்புதேவன் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிக்கும், 'புலி' திரைப்பட குழுவுக்கு பெரும் சவால் உருவாகியுள்ளது. அந்த சவாலை வெற்றிகரமாக புலி குழு கடக்குமா, அல்லது புலியின் பாதையில், பாகுபலி பெரும் தடைக்கல்லாக வழிமறித்து நிற்குமா என்பதே தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு விவாதப் பொருளாக உள்ளது.

    ரூ.250 கோடி பட்ஜெட் பாகுபலி

    ரூ.250 கோடி பட்ஜெட் பாகுபலி

    ராஜமவுலி இயக்கத்தில், சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம், பாகுபலி. பிரபாஸ், ராணா, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிக்க, கீரவாணி இசையமைப்பில் பிரமாண்ட திரைப்படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

    வசூல் சாதனை

    வசூல் சாதனை

    இந்திய சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்ற பாகுபலி, அதே வேகத்தில் போட்ட காசை திரும்ப எடுத்தும் வருகிறது. படம் வெளியான இரண்டே நாட்களில் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் மட்டும்தான் பிரமாண்ட திரைப்படத்திற்கு பெயர்போனவர் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டார் ராஜமவுலி என்கின்றனர் படத்தை பார்த்து வியந்தவர்கள்.

    பேன்டசி ரிஸ்க்

    பேன்டசி ரிஸ்க்

    இந்தியாவில் தயாரிக்கப்படும் பேன்டசி வகை திரைப்படங்கள் பெரும்பாலும் மண்ணைத்தான் கவ்வியுள்ளன. தமிழிலிலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி வணிக ரீதியாக தோல்வியடைந்த, ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் போன்றவை சமீபத்திய உதாரணங்கள். ஆனால் அதற்கு நேர் மாறாக பேன்டசி வகையை சேர்ந்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. காரணம், பேன்டசி படங்கள் என்பவை கம்பி மேல் நடக்கும் ரிஸ்க் உடையவை. அடைந்தால் மாபெரும் வெற்றியையும், சரிந்தால் மீள முடியா சரிவையும் தருபவை.

    உண்மையின் சாரல் தேவை

    உண்மையின் சாரல் தேவை

    பேன்டசி படம் என்ற ஒற்றை வரியை கொண்டு கற்பனைக்கு எட்டாத கதைகளை சொல்லும்போது, நிஜத்தோடும் அவை கொஞ்சமாவது, ஒத்துப்போக வேண்டியது அவசியம். பார்வையாளர்களை திரையுடன் கட்டிப்போட வேண்டும். பாகுபலி படத்தில் வரும் சென்டிமென்ட், ரொமான்ஸ் காட்சிகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். வெற்று பிரமாண்டத்தை நம்பி படம் எடுத்தால் அவை ஊத்திக்கொள்ளும் என்பதுதான் பேன்டசி படங்களில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம்.

    புலியும் பேன்டசி

    புலியும் பேன்டசி

    இப்போது புலி திரைப்படம் பற்றி பார்ப்போம். இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்பட புகழ், சிம்புதேவன் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிக்கும் புலி திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.118 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலிக்கும், இப்படத்துக்கும் உள்ள ஒற்றுமை, இரண்டுமே பேன்டசி வகை திரைப்படங்கள் என்பதுதான். ஹீரோயிசம் என்ற இமேஜிலுள்ள, விஜய்க்கு இவ்வகை படத்தில் நடிப்பதே முதலில் ஒரு சவாலான விஷயம்தான். அப்படியும் ரிஸ்க் எடுத்துள்ளார் விஜய்.

    பாகுபலி vs புலி

    பாகுபலி vs புலி

    இப்போது பிரச்சினை என்னவென்றால், புலி படத்துக்கு பாகுபலி உருவாக்கியுள்ள மிகப்பெரிய தடைதான். இந்த தடைக்கற்களை புலி படக்குழு படிக்கற்களாக மாற்றுமா என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பாகுபலி திரைப்படத்தின் மேக்கிங் மிக பிரமாண்டமாக உள்ளது. தமிழ் திரை ரசிகர்கள் பெரும்பாலானோர் இத்திரைப்படத்தை பார்த்துவிட்டனர். இந்நிலையில், புலி படம் வெளியாகும்போதும், ரசிகர்கள் மனதில் பாகுபலியின் பிரமாண்டமே ஆக்கிரமித்திருக்கும். ஒவ்வொரு காட்சியிலும், பிரேமிலும், பாகுபலியின் காட்சிகள் மனதில் வந்து செல்லும்.

    புலிக்கு பாதிப்பு

    புலிக்கு பாதிப்பு

    பாகுபலியுடனான ஒப்புமை, புலி திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்கின்றனர் திரைத்துறை சார்ந்தவர்கள். ராஜமவுலி போன்ற மேக்கிங் ஸ்டைலில் சிம்புதேவன் படம் எடுக்க வாய்ப்பில்லை. ஏனெனில், பாகுபலி சுமார் 3 ஆண்டுகால உழைப்பு; ரூ.250 கோடி முதலீடு. புலி குறுகிய காலத்தில் உருவாகும் திரைப்படம். பட்ஜெட்டும் பாகுபலியைவிட பாதிதான். எனவே ரசிகர்கள் ஏமாற்றமடையலாம். இந்த ஏமாற்றம் புலி வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்கின்றனர் திரைத்துறையில் ஊறியவர்கள்.

    டீசரிலேயே தெரிந்துவிட்டது

    டீசரிலேயே தெரிந்துவிட்டது

    இப்போதே, இருபடங்களின் ஒப்புமைக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன என்கின்றனர். பாகுபலி திரையிடப்படும் தியேட்டர்களில், புலி டீசர் வெளியிடப்படப்பட்டுள்ள நிலையில், இது கண்கூடாக தெரிந்ததாம். "பாகுபலி படம் ஆரம்பிக்கும் முன்பு போடப்பட்ட புலி டீசருக்கு கிடைத்த கைதட்டல், ஆரவாரம், இடைவேளையின்போது போடப்பட்ட டீசருக்கு கிடைக்கவில்லை. பெரிய கோடு (பாகுபலி) பக்கத்தில் சின்ன கோடு (புலி) எடுபடாமல் போவதன் அறிகுறி" என்று சொல்கிறார் இணையதள திரைவிமர்சகர்களில் ஒருவரான சி.பி.செந்தில்குமார்.

    மாற்றம் தேவை

    மாற்றம் தேவை

    பாகுபலியின் வெற்றியும், அதை சார்ந்த ஒப்புமைகளும், புலி திரைப்பட குழுவிற்கு பெரும் தடைக்கற்களாக மாறிவருவது கண்கூடு. இதை புலி படக்குழு உணர்ந்து சில மாறுபாடுகளை செய்தால், அவை, படத்தின் வெற்றிக்கு பலன் தரலாம். உதாரணத்துக்கு, இம்சை அரசன் 23ம் புலிகேசி பேன்டசி படமாக இருந்தாலும், பிரமாண்ட படம் கிடையாது. ஆனால் அதன் வசனங்கள், சமகாலத்துடன் கூடிய ஒப்புமை, சமூக பொறுப்புணர்வை தூண்டும் காட்சிகள் போன்றவை அப்படத்தை வெற்றிபெறச் செய்தது. அதேபோன்ற மாறுபட்ட கதைக்களம் இருந்தால் புலி பாய்வது உறுதி.

    தாங்கும் தளபதி ரசிகர்கள்

    தாங்கும் தளபதி ரசிகர்கள்

    சிம்புதேவன் இயக்கத்தில் வந்த அறை எண் 305ல் கடவுள், இரும்புகோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணியும் போன்ற படங்கள் காலை வாரிவிட்டன. அந்த அனுபவம் கற்றுத்தந்த பாடமும், விஜய் ரசிகர்களின் பலமும், புலியை காப்பாற்றும் என்று நம்புகின்றனர் தமிழ் ரசிகர்கள். பிரமாண்டத்தை மட்டுமே நம்பி சிம்புதேவன் பயணித்தால், அவரின் பாதையில், பாகுபலி, பலிவாங்க காத்திருக்கிறான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    English summary
    Bahubali India's most expensive film which is getting huge support from the fans said to be a challenge for the Puli film makers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X