பகாசூரன் இயக்குநரின் அடுத்த ஹீரோ.. அறிவிப்பை வெளியிட்டார் மோகன் ஜி
சென்னை: பகாசூரன் படத்தை இயக்கிய மோகன் ஜியின் அடுத்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி முதல் படத்தில் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. அதனையடுத்து திரௌபதி படத்தை இயக்கினார் மோகன். இந்தப் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், மோகன் ஜி வேண்டுமென்றே இப்படி படங்கள் எடுக்கிறார் என குற்றச்சாட்டையும் சிலர் முன் வைத்தனர்.

மோகன் ஜியின் ருத்ரதாண்டவம்
திரௌபதி படத்துக்கு மோகன் ஜி ருத்ரதாண்டவம் படத்தை இயக்கினார். இந்தப் படத்த்லில் நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாக நடித்தார். அவருடன் கௌதம் வாசுதேவ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படமும் திரௌபதி போலவே சர்ச்சைகளை சந்தித்தது. மேலும், சிறுபான்மையின மதத்தை புண்படுத்திவிட்டார் எனவும் சர்ச்சைகள் எழுந்தன.

பகாசூரன் படத்தை இயக்கிய மோகன் ஜி
இப்படி வரிசையாக சர்ச்சைகளை சந்தித்துவரும் மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் செல்வராகவன், நட்டி, கூல் சுரேஷ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.

பிற்போக்குத்தனமாக படம் எடுக்கிறாரா மோகன் ஜி?
குறிப்பாக பெண்களுக்கு ஸ்மார்ட் ஃபோனால் வரும் பிரச்னையை பேசுகின்றேன் என்ற பெயரில் பிற்போக்குத்தனமாக படத்தை எடுத்து வைத்திருக்கிறார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி பெண்களை மையப்படுத்திய படத்தில் எதற்காக ஐட்டம் சாங்கை இயக்குநர் வைத்தார் எனவும் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனால் பகாசூரன் படமும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

மோகன் ஜியின் அடுத்த படம்
இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி தனது அடுத்தப் படத்தின் கதாநாயகன் குறித்து அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதன்படி அவரது அடுத்த படத்தில் திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களில் நடித்த ரிச்சர்ட் ரிஷி மீண்டும் மோகன் ஜியுடன் இணைகிறார். இதுகுறித்து மோகன் ஜி தனது முகநூல் பக்கத்தில், "சில மீடியாக்களுக்கு.. இவரு யாருன்னு தெரியுதா.. காசி கங்கா ஆர்த்தியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.. எல்லா கடவுள்களையும் வணங்குபவர் ரிச்சர்ட் ரிஷி சார்.. நீங்களா எதாவது கிளப்பி விடாதீங்க.. அப்பறம் முக்கியமான செய்தி.. என்னோட அடுத்த படத்தின் கதாநாயகன் ரிச்சர்ட் சார்தான் அறிவிப்பு விரைவில்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











