Bakasuran: ஓ இதுதான் பகாசூரனா? செல்வராகவனின் புதுப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
சென்னை: இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடிப்பில் இன்று வெளியாகி உள்ளது பகாசூரன் திரைப்படம்.
பகாசூரன் என்றால் அரக்கனாயிற்றே இந்த படத்தில் செல்வராகவன் தான் அந்த பகாசூரனா என கேள்விகள் கிளம்பிய நிலையில், உண்மையாகவே தற்போது சமூகத்தை அழித்து வரும் பகாசூரனை பற்றிய படமாக இயக்குநர் மோகன் ஜி இந்த படத்தை உருவாக்கி உள்ளார்.
சமீபத்தில் வெளியான லவ் டுடே படத்திற்கும் இந்த படத்திற்கும் மிகப்பெரிய ஒற்றுமை உள்ள நிலையில், இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

பகாசூரன் கதை என்ன
திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி மீது சாதிய இயக்குநர் என்கிற முத்திரை குத்தப்பட்டு இருந்த நிலையில், இந்த படத்தின் மூலம் அந்த பார்வை மாறும் என பேட்டிகளில் கூறியிருந்தார். சமூகத்தில் இளம் பெண்களை குறி வைத்து நடத்தப்படும் மோசடிகளை பற்றிய கதையாக இந்த படம் உருவாகி உள்ளது. கிராமத்து அப்பாவான செல்வராகவனின் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான பழி வாங்கும் படலமாக 3 கொலைகளை அவர் செய்வதும், அவர் ஏன் அந்த கொலைகளை செய்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் நபராக முன்னாள் ராணுவ மேஜரான நட்டி நட்ராஜ் நடித்துள்ளார்.

தம்பிக்கு போட்டியாக
நடிகர் தனுஷின் வாத்தி திரைப்படம் கல்வியில் நடக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு இன்று வெளியாகி உள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடக்கும் பாலியல் ரீதியான மோசடிகள் குறித்த படமாக அண்ணன் செல்வராகவன் நடிப்பில் உருவாகி உள்ள பகாசூரன் படமும் இன்று வெளியாகி உள்ளது.

செல்வராகவன் நடிப்பு வெறித்தனம்
அப்பாவியான கிராமத்து அப்பாவாகவும், தனது மகளை இழந்த வேதனையில் பழி வாங்கும் நபராகவும் நடிப்பில் செல்வராகவன் வெறித்தனம் காட்டி உள்ளார். மோகன் ஜியின் கதை பவர்புல்லாக இருக்கு, நட்டி நட்ராஜை வில்லனாக காட்டாமல் இருந்ததே சிறப்பான விஷயமாக உள்ளது. சாம் சிஎஸ் இசை தரம் என இந்த ரசிகர் பகாசூரனை பாராட்டித் தள்ளி உள்ளார்.

ஆன்லைன் மூலம் பெண்களுக்கு எதிராக நடக்கும் மோசடி
ஆன்லைன் மூலம் ஒழுக்கக்கேடான செயல்களில் இளம் பெண்கள் எப்படி ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை ஆராயும் ஒரு சக்தி வாய்ந்த படம். இன்றைய இளம் தலைமுறையினர் மற்றும் பெற்றோர்களுக்கு பொருத்தமான படமாக இந்த படத்தை மோகன் ஜி உருவாக்கி உள்ளார் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

டிசாஸ்டர்
பகாசூரன் படத்தின் கதை எல்லாம் பழைய கதை என்றும் ஒரே வார்த்தையில் சொல்லணும்னா டிசாஸ்டர் படம் என இந்த நெட்டிசன் கடுமையாக விமர்சித்துள்ளார். படம் ரொம்பவே மெதுவாக நகர்வது தான் இந்த படத்திற்கு பெரிய வேகத்தடையாக உள்ளதாக இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











